search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி வழக்கு- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
    X

    மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி வழக்கு- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 9.24 லட்சம் மீனவர்கள் உள்ளனர். மீனவர்களின் நலன் கருதி மண்டல கமிஷன் பல பரிந்துரைகளை செய்துள்ளன. அதில், மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பஞ்சாயத்தை, தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆனால், பஞ்சாயத்து வார்டு வரையறை கமிஷன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தில், நெய்தல் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு 1980-ம் ஆண்டு முதல், அனைத்து மீனவர் கிராமங்களை உள்ளடங்கிய தனி கிராம பஞ்சாயத்து வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

    வார்டு வரையறை கமிஷன் தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்துக்கொண்டே வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில், கூட்டாம்புளி கிராமத்தில் 6 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இந்த ஊரை லெவஞ்சிபுரம் பஞ்சாயத்தோடு இணைத்துவிட்டனர். இதனால் மீனவ கிராம மக்களுக்கு ஜனநாயக ரீதியாக உள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

    ஏற்கனவே, கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    அதேநேரம், அவர்களது சொந்த கிராமத்தை நிர்வகிக்கும் அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்காதது, மனித உரிமை மீறலாகும். எனவே, தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்தாக வரையறை செய்து அறிவிக்கும்படி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர், இயக்குனர், வார்டு வரையறை கமிஷனின் தலைவர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #tamilnews
    Next Story
    ×