search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது- கி.வீரமணி
    X

    தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது- கி.வீரமணி

    ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது என கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கும்பகோணம் அரசினர் கல்லூரியில் முன்பு பார்ப்பன மாணவர்களுக்கு தனி பானை, மற்ற சாதி மாணவர்களுக்கு தனி பானை இருந்த போது அந்த தண்ணீர் பானையினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலே நடைபெற்று அதற்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பெரியார் அனுமதி பெற்று 1943-ம் ஆண்டு திராவிட கழகம் சார்பில் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் மாணவர் கழகம் இன்று 75 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய பவள விழாவை கொண்டாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் இதில் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு தன்னுடைய பணிகளை செய்து வருகிறது. நீட் தேர்வு என்பது எவ்வளவு குளறுபடியாக இருக்கிறது. அதேபோல் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு அம்சம் திட்டம் என்று கூறி வேதங்கள் மற்றும் பழைய புராணங்கள் முன்னிலை படுத்தப்படுகிறது.

    மத்திய அரசை பற்றி ஆழ்ந்த முடிவெடுக்கக்கூடிய மாநாடாக இந்த மாநாடு உள்ளது. இந்த மாநாட்டில் சில புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். நீட் தேர்வை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் மத்திய அரசு மாநில அரசுகளை மரியாதைக்கு கூட கவனிப்பதில்லை. நீட் தேர்வு தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. அனைத்து மாநிலத்திலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளது.


    எனவே நீட் தேர்வு மற்றும் கல்வித்துறையிலே இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் மிகப்பெரிய பிரசாரத்தை நடத்த உள்ளது. அரசியல் சட்டத்தையே தற்போது அரசு மதிப்பதாக தெரியவில்லை. ஆளுநருடைய ஆட்சி இருந்தால் மட்டுமே ஆளுநருக்கு வேலை. அல்லது நெருக்கடி நிலை ஏற்படும்போது டெல்லிக்கு தகவல் கொடுப்பது மட்டும் தான் அவருடைய வேலை. ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று போட்டி அரசாங்கம் நடத்துவது அவருடைய வேலை அல்ல.

    ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.க தற்போது ஆட்சி செய்து வருகிறது. முட்டை ஊழலுக்கு 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது கேவலமாக இருக்கிறது. பசுமை வழிச்சாலையால் யாருக்கு பலன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KiVeeramani #BJP
    Next Story
    ×