search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது - கூட்டுறவு, உணவு துறை மானிய கோரிக்கை மீது விவாதம்
    X

    தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது - கூட்டுறவு, உணவு துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

    2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.
    சென்னை:

    2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இடையில், ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

    அதன்பிறகு, ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது.

    கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி சட்டசபையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அன்றைய தினம் விவாதம் நடைபெற்று முடியவே அதிக நேரமானதால், அமைச்சர்களின் பதிலுரை ஒத்திவைக்கப்பட்டது.

    எனவே, இன்றைக்கு கூட்டம் தொடங்கியதும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோரின் பதிலுரை இடம்பெறுகிறது. கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படாது. அமைச்சர்களின் பதிலுரை முடிந்ததும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

    இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக, தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர். 
    Next Story
    ×