search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம்
    X

    தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம்

    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.

    ஒவ்வொரு போலீசாரிடம் இருந்தும் 1 யூனிட் வீதம் மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் ரத்தம் அனைத்தும் பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.

    இதுபற்றி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் ரத்த பரிமாற்ற குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாளை சுமார் 20,000 போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து தாமாகவே முன்வந்து ரத்த தானம் கொடுக்க உள்ளனர்.

    நமது மாநிலத்தில் ஆண்டிற்கு 8,00,000 யூனிட்ஸ் ரத்தம் தேவையுள்ளது, இதில் சுமார் 50 சதவீதம் ரத்தம் ( 4 லட்சம் யூனிட்ஸ்) 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது மீதமுள்ள 50 சதவீதம் ரத்தம் (4 லட்சம் யூனிட்ஸ்) தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை தேவைப்படுகிற ரத்தம், 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் நம் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

    மே மாதத்தில் பொதுவாக கல்லூரி விடுமுறையாக இருப்பதாலும், கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைவாக இருப்பதாலும் ஜூன் மாதத்தில் ரத்தம் அதிகமாக தேவைப்படும்.

    எனவே, ஜூன் மாதத்தில் காவல் துறையால் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    மேலும், சராசரியாக ஒருமாத பயன்பாட்டிற்கு தேவைப்படுகிற 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை ரத்தத்திற்கு, 29.06.2018 அன்று காவல்துறையால் திட்டமிடப்பட்ட ரத்த தான முகாமில் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை. இந்த ரத்தம் ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்பட உள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×