search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்திற்குள் கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்
    X
    குளத்திற்குள் கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்

    இரணியலில் இன்று அதிகாலை குளத்தில் கவிழ்ந்த லாரி- நீரில் மூழ்கி டிரைவர் பலி

    இரணியலில் இன்று அதிகாலை லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிடைவர் நீரில் மூழ்கி பலியானார்.
    இரணியல்:

    சாமியார்மடத்தை அடுத்த வியனூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது.

    ராஜேசுக்கு சொந்தமான லாரியில் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த சேகர் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். லாரியில் நேற்று ரப்பர் மரத்தடிகள் ஏற்றப்பட்டன.இதனை நெல்லை மாவட்டம் அம்பாச முத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லும்படி டிரைவர் சேகரிடம், லாரி உரிமையாளர் ராஜேஷ் தெரிவித்தார்.

    இதையடுத்து சேகர், மரத்தடிகள் ஏற்றிய லாரியுடன் வியனூரில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு புறப்பட்டார்.

    தக்கலை-இரணியல் ரோட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் லாரி சென்றது. ஆழ்வார்கோவில் அரசமூட்டு குளம் அருகே வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறு மாறாக ஓடியது.

    இதில், சாலையின் திருப்பத்தில் இருந்த குளத்திற்குள் லாரி தலை குப்புற கவிழ்ந்தது.

    அதிகாலையில் லாரி குளத்திற்குள் கவிழ்ந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி இரணியல் போலீசாருக்கும், தக்கலை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குளத்திற்குள் கவிழ்ந்த லாரியை மீட்க முயன்றனர்.

    லாரியில் மரத்தடிகள் இருந்ததால் அதனை உடனடியாக மீட்க முடியவில்லை. இதையடுத்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் லாரி மீட்கப்பட்டது. அப்போதுலாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் சேகர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    லாரி குளத்தில் கவிழ்ந்ததும் அதில் இருந்த மரத்தடிகள் குளத்திற்குள் விழுந்தபோது டிரைவர் சேகர், அதன் இடையே சிக்கி கொண்டதும் இதனால் அவர் குளத்தில் மூழ்கி பலியாகி இருப்பதும் தெரிய வந்தது.

    இதற்கிடையே லாரி குளத்தில் கவிழ்ந்த தகவல் அறிந்து லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் சேகரின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக மீட்கப்பட்ட சேகரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு கூடியிருந்தோர் மனதை உருக்குவதாக இருந்தது.

    பார்வதிபுரம் மேம்பால பணி காரணமாக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இப்போது தக்கலை- இரணியல் சாலை வழியாக ஆசாரிபள்ளம் சென்று வருகிறது. இதனால் தக்கலை-இரணியல் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும். இன்று அதிகாலையில் இச்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போக்குவரத்து போலீசார் இச்சாலையில் வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். #tamilnews
    Next Story
    ×