search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே 2-வது விமான நிலையம்
    X

    மதுராந்தகம் அருகே 2-வது விமான நிலையம்

    சென்னை 2-வது விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மதுராந்தகம் அருகே அமைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கத்தில் வெளிநாட்டு பயணத்துக்கான விமான நிலையம் மற்றும் உள்நாட்டு பயணத்துக்கான விமான நிலையம் இரண்டும் அருகருகே அமைந்துள்ளன.

    இந்தியாவில் அதிக பயணிகள் வந்து செல்லும் சர்வதேச விமான நிலையங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் சென்னை விமான நிலையத்தில் நெருக்கடி அதிகரித்துள்ளது. மீனம்பாக்கத்தில் தற்போதைய நிலையில் விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதையடுத்து சென்னை புறநகர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தை உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு ஒப்படைத்து விட்டு, புதிய 2-வது விமான நிலையத்தை வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் சர்வதேச விமான நிலையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனால் 2-வது விமான நிலையத்தை சர்வதேச தரத்துடன் மிகவும் நவீனமாக உருவாக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால் சென்னைக்கு அருகில் 2-வது விமான நிலையத்தை எந்த பகுதியில் உருவாக்குவது என்பதில் இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    முதலில் ஸ்ரீபெரும்புதூரில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அங்கு பசுமை விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஸ்ரீபெரும்புதூரில் 2-வது விமான நிலையம் அமைய திட்டமிடப்பட்டது கைவிடப்பட்டது.

    இதையடுத்து மதுராந்தகம்-உத்திரமேரூர் பகுதியில் உள்ள 1500 ஏக்கர் இடத்தில் விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    அதன்பிறகு கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லை அருகே 1250 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தனர். அதிலும் அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை.


    இந்த நிலையில் புதிய விமான நிலையத்துக்கு தற்போது நான்காவதாக மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. மதுராந்தகம் அருகே செய்யூர் பகுதியில் அந்த புதிய விமான நிலையத்தை அமைக்கலாமா என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். முதல் கட்டமாக மதுராந்தகம் தாலுகாவில் உள்ள தொழுபேடு, செய்யூர் தாலுகாவில் உள்ள அரப்பேடு, அயன்குன்னம் ஆகிய கிராமங்கள் உள்ள பகுதிகளை கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நிலப்பகுதியை அங்கு கையகப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள். ஜி.எஸ்.டி. சாலைக்கும், இ.சி.ஆர். சாலைக்கும் நடுவில் இந்த இடம் உள்ளதால் சென்னைக்கு விரைந்து செல்லும் வகையில் புதிய விமான நிலையத்தை அமைக்க முடியும் என்று அதிகாரிகளில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    செய்யூர் தாலுகாவில் 3 கிராமங்களையும், மதுராந்தகம் தாலுகாவில் 2 கிராமங்களையும் காலி செய்தால் மிக நவீன விமான நிலையத்தை உருவாக்க முடியும் என்று சர்வதேச நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் புதிய விமான நிலையத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள செய்யூருக்கும், சென்னைக்கும் உள்ள சுமார் 100 கி.மீ. தொலைவு மட்டும்தான் அதிகாரிகளை மலைக்க வைத்துள்ளது.

    சென்னை-செய்யூர் இடையே சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லாததால் வெளிநாட்டு பயணிகள் நகருக்குள் வந்து செல்ல சுமார் 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். அது போல வெளிநாடுகளுக்கு செல்லும் போது சென்னையில் இருந்து குறைந்தது 5 மணி நேரத்துக்கு முன்பே புறப்பட வேண்டியதிருக்கும்.

    இது வெளிநாட்டு பயணிகளுக்கு இடையூறாக அமைந்து விடும் என்று கருதப்படுகிறது. இதனால் சென்னை-செய்யூர் இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் சாலையின் தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தற்போது அதிகாரிகளின் ஆய்வு பட்டியலில் மதுராந்தகம் அருகே செய்யூர், உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி மூன்று இடங்களும் உள்ளன. இந்த 3 இடங்களில் எங்கு புதிய விமான நிலையம் அமையும் என்பது விரைவில் தெரிந்து விடும். #ChennaiAirport
    Next Story
    ×