search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.
    X
    ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.

    ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது

    தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி ஆலையை சுற்றியுள்ள கிராமமக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டதால் போராட்டம் தீவிரமானது. கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடகோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போது வன்முறை வெடித்தது.

    இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது.

    இதையடுத்து ஆலை சீல் வைக்கப்பட்டது. ஆலை முன்பாக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரசாயன கசிவு இருப்பதாக கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் லிவிங்ஸ்டன், மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமரேசன், தாசில்தார் சிவகாமசுந்தரி, டி.எஸ்.பி. முத்தமிழ், தொழிற்சாலை ஆய்வாளர்கள் ராஜ்குமார், சரவணன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் நேற்று மாலை ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ய சென்றனர். அப்போது போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனம், கலவர தடுப்பு வாகனமும் கொண்டு செல்லப்பட்டது.

    அதிகாரிகள் குழு ஆலையின் பக்கவாட்டில் உள்ள சிறிய கேட் வழியாக ஆலைக்குள் சென்றார்கள். ஆலையின் குடோன் பகுதிக்கு சென்ற அவர்கள் அங்கு ரசாயன மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தார்கள். சுமார் 2 மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது.

    அப்போது ஆலையின் குடோனில் வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவானது  கண்டுபிடிக்கப்ப‌ட்டது. இந்த விவரத்தை அதிகாரிகள் குழுவினர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தெரிவித்தார்கள்.  இதைத்தொடர்ந்து கசிவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இரவோடு இரவாக ரசாயன கசிவை சரி செய்வதில் சிக்கல்  ஏற்பட்டது. இதைதொடர்ந்து இன்று காலை கசிவை சரி செய்யும் பணியை தொடங்கினர்.

    இதற்காக ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். மேலும் என்ஜினீயர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளும், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு மீட்பு படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்திருந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு அதிகாரிகள் குழு வந்தபோது எடுத்த படம்.

    கந்தக அமிலத்தை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றி வெளியே கொண்டு வருவதற்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டன. அந்த லாரிகள் மூலம் ஆலை குடோனில் இருந்து கந்தக அமிலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டது குறித்த தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களில் பரவியது. இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பரபரப்பும், பதட்டமும் உண்டானது. கிராமமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அதிர்ச்சியுடன் சாலையில் திரண்டார்கள். விடிய விடிய பொதுமக்கள் பீதியுடன் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    ரசாயன கசிவால் ஆபத்து இல்லை என்று கலெக்டர் சதீப் நந்தூரி தெரிவித்தார். எனினும் பொதுமக்கள் மத்தியில் இன்னும் பீதி அடங்கவில்லை.

    இதுபற்றி அப்பகுதியினர் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தை சுத்திகரிக்க பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள். இவை மிகவும் ஆபத்தானவை. இந்த அமிலங்களை ஆலை நிர்வாகம் இன்னமும் ஆலையின் குடோனிலேயே வைத்திருக்கிறது. இது உடனடியாக அப்புறப்படுத்தப்படவேண்டும்.

    ஆலை மூடபப்பட்டதால் ரசாயனங்களை அரசே முன்நின்று பாதுகப்பாக அப்புறப்படுத்தவேண்டும்’ என்றனர். #SterlitePlant  #Sterlite
    Next Story
    ×