search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி
    X

    வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி

    வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கன்டெய்னர் லாரி, நிலக்கரி ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் பலியானார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கன்டெய்னர் லாரி, நிலக்கரி ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் பலியானார். இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கார்களை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை புறப்பட்டது. லாரியை அரியானாவை சேர்ந்த தரம்வீர்சிங் (வயது 48) என்பவர் ஓட்டினார். காலை 8 மணி அளவில் வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே சென்னை - பெங்களூரு பைபாஸ் சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கன்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு எதிர் திசையில் உள்ள சாலைக்கு சென்றது.

    அப்போது எதிர்திசையில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஓசூருக்கு நிலக்கரி ஏற்றி சென்ற லாரி மீது, கன்டெய்னர் லாரி மோதியது. இதில், நிலக்கரி ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பு சுவரில் ஏறி அணுகுசாலையில் (சர்வீஸ் ரோடு) இறங்கி கால்வாய் மீது மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் தரம்வீர்சிங் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குரும்பூர்பள்ளி கிராமத்தை சேர்ந்த மணி படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், விபத்தில் பலியான டிரைவர் தரம்வீர்சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு பைபாஸ் சாலையின் ஒருபுறம் மற்றும் அதன் அணுகுசாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் வேலூர் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    அதையடுத்து போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்கினர். கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக வாகனங்கள் வேலூருக்கு வந்து, பின்னர் கொணவட்டம் பகுதியில் பைபாஸ் சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக வேலூர் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பள்ளி, அலுவலகத்துக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, லாரிகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் டீசல் டேங்க்கில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் டீசல் சாலையில் வழிந்தோடியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீ விபத்து ஏற்படாமல் இருக்க சாலையில் வழிந்தோடிய டீசல் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ராட்சத கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×