search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜராஜ சோழன் சிலை மீட்புக்கு தினத்தந்தி செய்தியே காரணம் - முன்னாள் அமைச்சர் பேட்டி
    X

    ராஜராஜ சோழன் சிலை மீட்புக்கு தினத்தந்தி செய்தியே காரணம் - முன்னாள் அமைச்சர் பேட்டி

    “30 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன ராஜராஜ சோழன் சிலை மீட்புக்கு ‘தினத்தந்தி’ செய்தியே காரணம்”, என்று முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் கூறினார்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், வி.வி.சாமிநாதன். இவர் சென்னையில் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவு போன ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் மிருளானி சாராபாய் மியூசியத்தில் இருக்கிறது, அச்சிலைகளை கைப்பற்ற வேண்டும்’, என்று ‘காஞ்சி பெரியவாள்’ என்று அழைக்கப்படுகிற சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

    அரசியல் செல்வாக்கும், செல்வமும், அதிகாரமும் உள்ள ஒரு குழு, இந்த களவுபோன சிலைக்கு பின்னால் இருக்கிறது. எனவே தான் அந்த சிலைகளை கைப்பற்ற முடியாமல் 30 ஆண்டுகள் கடந்து விட்டன.

    இந்த சம்பவம் தொடர்பாகவும், அதன் வழக்கு பின்னணி தொடர்பாகவும் ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தேன். ‘தினத்தந்தி’ பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டு, சிலை களவு போனது குறித்து உலகம் அறிய செய்தது.

    இதுதொடர்பாக தமிழக அரசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். மாநில அரசின் சிலை மீட்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடமும் நேரில் வேண்டுகோள் விடுத்தேன். தொடர் நடவடிக்கைகளால் தான் சிலை மீட்பு தனிக்குழு உருவாக்கப்பட்டது.

    அந்த தனிக்குழுவினர் தான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவு போன ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகளை மீட்டு கொண்டு வந்தனர்.

    எனவே ‘தினத்தந்தி’ பத்திரிகை வெளியிட்ட செய்தியே ராஜராஜன் சிலை மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் மீட்க முக்கிய காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×