search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசார பயணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது எடுத்தப்படம்.
    X
    பிரசார பயணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது எடுத்தப்படம்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி உண்மை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #ThoothukudiFiring #CBI
    நித்திரவிளை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் இருந்து பிரசார பயணம் மேற்கொண்டு திருச்சி சென்றடைய முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, எட்டயபுரம், கடலூர், திருவள்ளூர், வேலூர், நீலகிரி ஆகிய 6 இடங்களில் இருந்து இன்று இந்த பிரசார பயணம் தொடங்கியது.

    குமரி மாவட்டம் நித்திரவிளையில் இன்று காலை தொடங்கிய பிரசார பயணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தை 6 மாதத்துக்கு முன்பு ஒக்கி புயல் தாக்கியபோது பலர் உயிரிழந்தனர். அப்போது இங்கு வேதனையான மனநிலையுடன் வந்தேன். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எந்தவித உதவியும் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் கேரள மாநில முதல்வர், அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து நிவாரணங்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    மக்களை பாதுகாக்கும் அரசாக மத்திய அரசும், தமிழக அரசும் திகழவில்லை. உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி. தமிழக மக்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மூலம் இரண்டு பக்கமும் இடி விழுகிறது.

    குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் மோடி அரசு அதை செய்யவில்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கரும்பு, பருத்தி, நெல் போன்றவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரிக்கு பிறகு பெரும் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் கடந்த 10 மாதத்தில் 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.


    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மக்கள் நலனை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் 13 பேர் சுட்டுக்கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. தமிழக அரசு கேட்டுக்கொண்டால் துணை ராணுவத்தை அனுப்புவதாக கூட மத்திய மந்திரி கூறினார். எனவே ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி உண்மை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #ThoothukudiFiring #CBI #GRamakrishnan
    Next Story
    ×