search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
    X

    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

    டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
    Next Story
    ×