search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது
    X

    அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது

    அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று காலை தொடங்கியது. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அசல் சான்றிதழ்களை பல்கலைக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. 1 லட்சத்து 59 ஆயிரம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    மாணவ- மாணவிகள் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்க்கும் பணி முதல் கல்லூரிகளை தேர்வு செய்வது வரை இந்த உதவி மையங்கள் மூலம் நடைபெறுகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக பல்கலைக்கழக ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வருகிற 14-ந்தேதி வரை இப்பணி நடைபெறுகிறது.

    விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த உதவி மையங்களில் குறித்த நேரத்திற்கு சென்று சான்றிதழ்களை காண்பித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கான உதவி மையம் செயல்படுகிறது. இந்த உதவி மையத்தில் 100-க்கும் மேலான கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டு இணைய தள வசதி செய்யப்பட்டு இருந்தன.


    சான்றிதழ் சரிபார்க்கும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. மாணவ- மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அசல் சான்றிதழ்களை பல்கலைக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரிய ராஜ் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்றது.

    விண்ணப்பதாரர்கள் கொண்டு வந்த சான்றிதழ்கள் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்து அதன் பின்னரே அனுப்பப்பட்டனர்.

    மாணவ-மாணவிகளுடன் பெற்றோர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் குவிந்தனர். தினமும் 20 ஆயிரம் பேர் வீதம் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். #AnnaUniveristy
    Next Story
    ×