என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிமருந்துகள் திடீரென வெடித்ததில் 3 தொழிலாளர்கள் பலி- நில உரிமையாளர் கைது
    X

    வெடிமருந்துகள் திடீரென வெடித்ததில் 3 தொழிலாளர்கள் பலி- நில உரிமையாளர் கைது

    கிணற்றில் வெடி வைப்பதற்காக வெடிமருந்துகளுடன் இறங்கியபோது திடீரென வெடித்து சிதறியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக நில உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 51) என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றை 70 அடிக்கு மேல் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

    வழக்கம்போல் நேற்றும் கிணற்றை ஆழப்படுத்துவதற்கு கூலி தொழிலாளர்கள் சீத்தாராமன் (26), தங்கராஜ் (27), குமார் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மண் அள்ளும் கிரேன் மூலம் 60 ஜெலட்டின் குச்சி மற்றும் வெடிமருந்துகளுடன் கிணற்றில் இறங்கினர். அப்போது திடீரென ஜெலட்டின் குச்சிகள் வெடித்துச்சிதறின. இதில் 3 பேரும் கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர்.

    வெடி சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் புகை மூட்டத்தை போக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி உள்ளே இறந்துகிடந்த 3 பேரின் உடலையும் மீட்டனர். போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் பாலசுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். இறந்த 3 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். #tamilnews
    Next Story
    ×