search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு - தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி
    X

    ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு - தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #Sterlite
    தூத்துக்குடி:

    தமிழக அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று மாலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆலையின் முன்பு குவிந்தனர்.

    ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட உடன் அவர்கள் தைத்தட்டியும், கைகளை உயர்த்தியும் கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் ஒன்றிணைந்து போராடியதால் கிடைத்த வெற்றி. துக்கத்திலும் சந்தோஷமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்த அரசுக்கும், மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் ஒற்றுமையுடன் போராடியதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது” என்றார்.


    தூத்துக்குடியைச் சேர்ந்த நக்கீரன் என்பவர் கூறுகையில், “கடந்த 23 ஆண்டுகளாக ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் அரசு அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. தற்போது, 100 நாட்கள் மக்கள் போராட்டம் நடத்திய போதும் அரசு கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து 13 பேரின் உயிர்களை இழந்தும், பலர் ரத்தம் சிந்தியும் உள்ளனர். இப்படி கஷ்டப்பட்டு தான் இந்த உத்தரவை பெற்றுள்ளோம். இது திருப்தி அளிக்கிறது. இதே நேரத்தில் வேதாந்தா அதிபர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து ஆலையை இயக்க முயற்சி செய்வார். இதனால் மாநில அரசு தக்க நடவடிக்கைகளை தற்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

    பண்டாரம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. இது மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. 13 உயிர்களை இழந்து இருக்கிறோம். அரசு மேற்கொண்ட நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதுவரை போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது” என்றார்.


    மடத்தூரைச் சேர்ந்த பொன்பாண்டி கூறும்போது, “ஆலை மூடப்பட்டு இருப்பது கிராமமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அரசு கண்டுகொள்ளவில்லை. 13 உயிர்கள் போன பிறகு தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் உள்ளது. அதே நேரத்தில் ஆலை நிர்வாகத்தினர் ஆலையை இயக்குவதற்காக வழக்கு தொடர்ந்தால் அதை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்” என்றார்.

    தூத்துக்குடியை சேர்ந்த ஜெரால்டு ரவி என்பவர் கூறுகையில், “தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளித்து ஆலையை மூடிய அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் இந்த நிகழ்வுக்காக தங்களின் உயிரை தியாகம் செய்த 13 சொந்தங்களும், கை, கால்களை இழந்தும் வேதனைப்பட்டோரை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. போராட்டத்தில் இறந்த சொந்தங்கள் அனைவருக்கும் அவரவர் மத அடிப்படையில் சடங்குகள் நடத்தப்பட்டு, ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நினைவகம் கட்ட வேண்டும்” என்றார். #Sterlite #SterliteProtest
    Next Story
    ×