search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த 6 மாத பெண் குழந்தையால் பரபரப்பு
    X

    கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த 6 மாத பெண் குழந்தையால் பரபரப்பு

    கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 6 மாத பெண் குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. வழக்கம் போல மருத்துவமனை இன்று காலை பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள ஸ்கேனிங் அறையின் அருகே ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு சந்தேகம் அடைந்த பரிசோதனை அறையில் உள்ள செவிலியர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து 6 மாதமே ஆன பெண் குழந்தை துணியால் சுற்றி கிடத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் செவிலியர்கள் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டனர். குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்ததால் செவிலியர் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர் குழந்தை அழுகையை நிறுத்தியது. இதைதொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். அவர்கள் குழந்தை நலமாக இருப்பதாக கூறினர்.

    இதையடுத்து போலீசார் குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 6 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய் யார்? அல்லது குழந்தை கடத்தி கொண்டு வரப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×