search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்குளத்தில் பேருந்துக்கு தீவைப்பு - தூத்துக்குடியில் அனைத்து பஸ்களும் பணிமனைக்கு திரும்ப அறிவுறுத்தல்
    X

    கருங்குளத்தில் பேருந்துக்கு தீவைப்பு - தூத்துக்குடியில் அனைத்து பஸ்களும் பணிமனைக்கு திரும்ப அறிவுறுத்தல்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பேருந்துக்கு தீவைக்கப்பட்டதை அடுத்து அனைத்து பஸ்களும் பணிமனைக்கு திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.

    தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. தூத்துக்குடியில் மட்டும் இன்னும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாலை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசுப்பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா கருங்குளத்திற்கு விரைந்தார். கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து அரசுப் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடியில் இயங்கும் அரசுப்பேருந்துகள் அந்தந்த பணிமனைகளுக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.  #ThoothukudiPoliceFiring #SterliteKillings
    Next Story
    ×