search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ் - பறவைகள் கொத்திய பழங்கள், காய்கறிகளை சாப்பிடக் கூடாது
    X

    நிபா வைரஸ் - பறவைகள் கொத்திய பழங்கள், காய்கறிகளை சாப்பிடக் கூடாது

    கேரளாவில் வவ்வால் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது, பறவைகள் கடித்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #nipahvirus

    சென்னை:

    கேரளாவில் பரவும் ‘நிபா வைரஸ்’ காய்ச்சலுக்கு 16 பேர் பலியாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    மலைப்பாங்கான பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் இருந்தும் பழம் தின்னும் வவ்வால்கள் மூலமும் இது பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளா முழுவதும் நிபா வைரஸ் பீதி ஏற்பட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்களின் பீதியை போக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் கேரள அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

    கேரள மந்திரிகள் சைலஜா, டி.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மந்திரி சைலஜா கூறியதாவது:-

    நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. இரு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கணக்கெடுத்து அவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

    கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து தமிழக எல்லைப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை அனைத்து துறையினருக்கும் விடுக்கப்பட்டுள்ளது.


    மூளைக்காய்ச்சல், சாதாரண காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழத்தின்னி வவ்வால்கள் மூலமும் மலைப் பாங்கான பகுகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் இருந்தும் தான் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் பன்றி வளர்ப்போர், பண்ணைகள் ஆகியவற்றில் உள்ள பன்றிகளை கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    வனப்பகுதியில் பழங்கள் காய்க்கும் மரங்கள் உள்ளிட்ட பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    கேரள எல்லையில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுவதால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இறக்குமதியாகும் பழங்கள், காய்கறிகள் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள்.

    பறவைகள் கடித்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    நோய்வாய்பட்ட பன்றிகள் இருக்கும் பகுதிகளில் புழங்க கூடாது. காய்கறிகள் பழங்களை நன்கு தண்ணீரில் கழுவிய பின்புதான் சாப்பிட வேண்டும்.


    வவ்வால் உள்ளிட்ட பறவைகள் கொத்திய பழங்களைச் சாப்பிடக் கூடாது, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவ மனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களுக்கு தாங்களே சுய மருத்துவம் கூடாது என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நிபா வைரஸ் 5 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, மனக்குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.

    நோய் தீவிரம் அடையும் போது நோயாளி சுய நினைவை இழப்பார். அதைத் தொடர்ந்து அவர்களது நரம்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவை பாதிக்கப்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    டெங்கு காய்ச்சலைப் போன்றே நிபா வைரஸ் பாதிப்புக்கும் தனியாக சிறப்பு சிகிச்சை முறைகள் கிடையாது. இந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பூசியும் தடுப்பு மருந்துகளும் கிடையாது. என்றாலும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர், உமிழ் நீர், வியர்வை உள்ளிட்டவற்றின் மாதிரிகளைப் பரிசோதிப்பதன் மூலம் பாதிப்பை கண்டறிய முடியும். மாதிரிகளை புனே, மணிப்பால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்க முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நிபா வைரஸ் பெயர் வந்தது எப்படி?

    நிபா வைரஸ் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் தான் முதன் முதலில் பரவி அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக இறந்தனர். அவர்களின் ரத்தத்தை சோதனை செய்து பார்த்த போதுதான் இந்த வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதற்கு நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது. இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவாது. வவ்வால்கள், பன்றிகள் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டது.

    வவ்வால்களின் சிறு நீரகம், உமிழ் நீர், முகம் ஆகிய இடங்களில் இருந்து நிபா வைரஸ் உற்பத்தியாகிறது. இந்த வவ்வால்கள் கடித்த பழங்களை தின்னும் போது மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவுகிறது.

    வவ்வால்கள் கடித்த பழங்களை தின்னும் விலங்குகளின் சிறுநீர், உமிழ் நீர் படுவதன் மூலமும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

    நிபா வைரஸ் பன்றி, பூனை, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கும் இந்த விலங்குகளுடன் பழகுவதன் மூலம் மனிதர்களுக்கும் நோய் தொற்று எற்பட வாயப்பு உள்ளது.

    1998-99-ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூரில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு வங்காள தேசத்திலும் பரவியது. இந்தியாவில் கேரளா உள்பட மலைப் பிரதேசங்கள் கொண்ட மாநிலங்களிலும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. #nipahvirus

    Next Story
    ×