search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம் வருமாறு:-

    சிவகங்கையில் 9 சென்டி மீட்டர் மழையும், குளச்சலில் 7 செ.மீ. மழையும், வெண்பாவூர், மானாமதுரை, மாயனூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சாத்தான்குளம், அரியலூரில் தலா 4 செ.மீ. மழையும், சாத்தூரில் 3 செ.மீ. மழையும், திருக்காட்டுபள்ளி, பேச்சிப்பாறை, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    மேலும், சிவகாசி, இரணியல், முசிறி, துறையூர், முதுகுளத்தூர், காரைக்குடி, மதுரை விமானநிலையம், அறந்தாங்கி, சின்னக்கல்லார், திருமங்கலம் போன்ற பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    லட்சத்தீவை ஒட்டிய பகுதிகள், தெற்கு இலங்கையை ஒட்டிய பகுதிகளில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தெற்கு அரபிக் கடலில் 21-ந் தேதி(நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை அந்தமான் கடற்பகுதிகளில் வருகிற 23-ந் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பூர் போன்ற மாவட்டங்களில் 100 முதல் 105 டிகிரி வரை அதிகபட்ச வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி வரை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×