search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவர் துளையிட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    சுவர் துளையிட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    எட்டயபுரத்தில் நகைக்கடை சுவரை துளையிட்டு 100 பவுன் நகை கொள்ளை

    எட்டயபுரத்தில் இன்று நகைக்கடை சுவரை துளையிட்டு 100 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பெரிய கிணற்று தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் வெங்கடேஷ் ராஜா. எட்டயபுரம் வர்த்தக சங்க துணைத்தலைவர். இவர் அரசு மருத்துவமனை எதிரே ஒரு நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்புறம் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை லாட்ஜின் சுவர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி இதுகுறித்து லாட்ஜ் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது லாட்ஜின் பின்பக்க சுவரை துளையிட்டு நகைக்கடைக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து 100 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் அங்கிருந்த 3 சி.சி.டி.வி. கேமிராவையும், ஒரு டி.வி.யையும், கொள்ளையர்கள் தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ராம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    கொள்ளை நடந்த நகைக்கடை

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு நகைக்கடையை உடைத்து கொள்ளை போனது. இந்நிலையில் இன்று மற்றொரு நகைக்கடையில் சுவரை துளையிட்டு 100 பவுன் நகைகள் கொள்ளை போனது எட்டயபுரம் கடை உரிமையாளர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்து திருட்டு போன நகைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×