search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வறட்சி காலத்திலும் வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பவர் முதல்வர் எடப்பாடி: அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி
    X

    வறட்சி காலத்திலும் வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பவர் முதல்வர் எடப்பாடி: அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி

    தமிழகத்தில் வறட்சி காலத்திலும் வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் வருமா? என்பதற்கெல்லாம் யூகமாக பதில் கூற முடியாது. தமிழக முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு இதுவரை எந்த வகையில் அழுத்தம் கொடுத்தாரோ, அதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அழுத்தம் கொடுப்பார்.

    மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் செல்வார். மத்தியஅரசு அமைத்துள்ள வரைவு திட்டத்தை ஏற்று கொண்டதா? இல்லையா? என்பதில் பிரச்சினை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்குரிய 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழக முதல்வரின் கோரிக்கை. எங்களுடைய கோரிக்கையும், செயல்பாடும் அது தான்.

    குறுவை சாகுபடி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தான் பொய்த்துள்ளது. அப்படியும் உணவு தானிய உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 144 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு வறட்சி ஏற்பட்டது. அந்த வறட்சியிலும் தமிழக முதல்வர் வளர்ச்சி காண்கின்ற வகையில் வளர்ச்சி திட்டங்களை செய்திருந்தார்.குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து இதுவரை விவாதிக்கவில்லை. குறுவை சாகுபடிக்கான கால அவகாசம் இருக்கிறது, பருவ மழை தொடங்க இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் பெற இருக்கிறோம்.

    குடிமராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. உரிய நிதியை ஒரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார். அதன்மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×