search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை வெப்பத்தால் கறிக்கோழி விலை கடும் உயர்வு- கிலோ ரூ.240க்கு விற்பனை
    X

    கோடை வெப்பத்தால் கறிக்கோழி விலை கடும் உயர்வு- கிலோ ரூ.240க்கு விற்பனை

    கோடை வெப்பம் காரணமாக கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று கறிக்கோழி விலை 1 கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது.
    சென்னை:

    கோடை வெப்பம் காரணமாக கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று கறிக்கோழி விலை 1 கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் கறிக்கோழி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது.

    கடந்தவாரம் ரூ.160 முதல் ரூ.190 வரை விற்கப்பட்டது. நேற்று திடீரென்று ரூ.240 ஆக உயர்ந்தது. அதாவது ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் நேற்று கறிக்கோழி வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கறிக்கோழி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போது 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன்வரத்து குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் கறிக்கோழி வாங்க தொடங்கிவிட்டனர். எனவே கறிக்கோழி விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது கோடைவெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இதனால் கோழிப் பண்ணைகளில் கோழி உற்பத்தி குறைந்துவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இறப்பும் அதிகரித்து வருகிறது. எனவே கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே கறிக்கோழி விலை அதிகரித்து விட்டதாக நாமக்கல்லை சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கோடை அல்லாத காலங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் விரைவில் எடைகூடும். வெயில் காலங்களில் கோழிகள் எடை அதிகரிப்பது தாமதமாகும். இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கோழிப்பண்ணைகளில் கடந்த 2 வாரத்தில் கிலோவுக்கு விலை ரூ.16 முதல் ரூ.19 வரை அதிகரித்திருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்காக செல்லும் கறிக்கோழிகளுக்கு பிராய்லர் ஒருங்கிணைப்பு கமிட்டி தான் விலையை நிர்ணயிக்கிறது. கோழிகள் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. கோடைகாலம் முடிந்தபிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கறிக்கோழி விலை ரூ.50 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னையை பொறுத்த வரை தற்போது கறிக்கோழி கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. எலும்பு இல்லாத கறிக்கோழி கிலோ ரூ.340 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது. கோழிப்பண்ணைகளில் மே-1-ந்தேதி கறிக்கோழி கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.109-க்கு விற்கப்பட்டது.

    மீன்பிடி தடைகாலம் காரணமாக காசிமேட்டில் சங்கரா மற்றும் கொடுவா மீன் 1 கிலோ ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. வஞ்சிரமீன் ரூ.750 ஆக உயர்ந்துள்ளது.#tamilnews
    Next Story
    ×