search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கம்பாளையத்தில் விவசாயியை கத்தியால் குத்தி நகை-பணம் கொள்ளை
    X

    ரங்கம்பாளையத்தில் விவசாயியை கத்தியால் குத்தி நகை-பணம் கொள்ளை

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ரங்கம்பாளையத்தில் விவசாயியை கத்தியால் குத்தி நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ரங்கம்பாளையம், ஓடைக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 36).

    விவசாயியான இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இவரது தாயார் தங்கம்மாள். இருவரும் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு இவர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது இதையடுத்து கோபாலகிருஷ்ணனும், தங்கம்மாளும் கதவு அருகே வந்து கதவை திறந்தனர்.

    அப்போது முகத்தை துணியால் மூடியபடி 6பேர் வாசலில் நின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். கோபாலகிருஷ்ணனும், தங்கம்மாளும் சத்தம் போட முயன்றனர்.

    அவர்களை அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டியது. இதனால் கோபாலகிருஷ்ணனும், தங்கம்மாளும் சத்தம் போடாமல் இருந்தனர்.

    அந்த கும்பல் பணம், நகையை கேட்டு துன்புறுத்தியது. கோபாலகிருஷ்ணனின் முதுகில் கத்திக்குத்தும் விழுந்தது. அவரை அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.

    தங்கம்மாள் அணிந்திருந்த நகையை கேட்டு துன்புறுத்தினர். தங்கம்மாளை தாக்கவும் முயன்றனர். தனது தாயை தாக்க வேண்டாம் என்று அவர்களிடம் கோபாலகிருஷ்ணன் கெஞ்சினார்.

    இதையடுத்து தங்கம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்தது.

    பின்னர் வீட்டுக்கு வெளியே நின்ற காரில் தப்பிச் சென்றனர். அப்போதுதான் அவர்கள் காரில் வந்திருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.கொள்ளை நடந்த வீட்டுக்குள் மோப்பம் பிடித்த நாய் மெயின் ரோட்டுக்கு சுமார் ž கிலோ மீட்டர் தூரம் ஓடி பின்னர் அங்கேயே நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×