search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம் - கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
    X

    இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம் - கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

    கோவையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டு உள்ளது. #insectmuseum #Coimbatore
    கோவை:

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில் 6,691 சதுரஅடி பரப்பளவில் ரூ.5 கோடி செலவில் நாட்டிலேயே முதன்முதலாக பூச்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டுள்ளது.

    இந்த பூச்சி அருங்காட்சியகத்துக்கு, பூச்சியியல் துறையை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் மாணவர்கள் இந்தியா முழுவதும் 382 நாட்களில் 89 ஆயிரத்து 249 கி.மீ. தூரம் பயணித்து 84 ஆயிரம் வகையான பூச்சிகளை சேகரித்தனர். இங்கு வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்பூச்சிகள், வண்டுகள், கரப்பான் பூச்சிகள், பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள், விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் உள்பட ஏராளமான பூச்சிகள் இருக்கின்றன.



    மேலும் இங்கு பூச்சிகளின் வாழ்க்கை முறை, விவசாயிகளுக்கு அந்த பூச்சிகள் எந்த முறையில் தீமை செய்கிறது, தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிகள் எவை, அவற்றை வளர்ப்பது எப்படி, விஷப்பூச்சிகள் எவை, அந்த பூச்சிகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பன உள்பட அனைத்து தகவல்களும் இடம்பெற்று உள்ளன.

    அதுபோன்று இடம் பெயர்ந்து செல்லும் பூச்சிகள், ஒரே இடத்தில் தங்கி இருக்கும் பூச்சிகள், அவைகளின் வாழ்க்கை முறைகள், நமது வீட்டில் இருக்கும் பூச்சிகள், காடுகளில் இருக்கும் பூச்சிகள், அவற்றின் நன்மைகள், பெரிய அளவிலான வெட்டுக்கிளி ஆகியவை அங்கு வைக்கப்பட்டு இருக்கும் தொடுதிரை மூலம் விளக்கப்பட்டு உள்ளது.



    முற்றிலும் குழந்தைகளுக்காகவே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது அதிகளவில் பயன் கொடுக்கும். விவசாயிகளுக்கும் அதிக பயன்கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஈசல் பூச்சியை சில இடங்களில் சாப்பிடும் வழக்கம் உண்டு. அந்த பூச்சியை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டு இருக்கிறது.

    ஈசல் பூச்சிகளை 4 வித ருசிகளில் சுவைத்து சாப்பிடும் வகையில் தயார் செய்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் பூச்சிகளை கொண்டு உருவாக்கப்பட்ட பலவகையான பரிசு பொருட்கள் விற்பனையகமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    குடுமியான் மலையில் உள்ள வேளாண் கல்லூரியில் இருந்து 14½ டன் எடை கொண்ட கரையான் புற்று கொண்டு வரப்பட்டு இங்கு வைக்கப்பட்டு இருக்கிறது. கரையான் எப்படி வாழும், அவற்றால் ஏற்படும் பயன் என்ன? என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தேனீக்களின் வகைகள், அவற்றின் பயன்கள், அவற்றை வளர்ப்பது எப்படி? அவற்றின் மூலம் நாம் பெறும் லாபம் எவ்வளவு? என்பதும் தொடுதிரை மூலம் விளக்கப்பட்டு இருக்கிறது.

    முக்கியமாக 12 ஆயிரம் கி.மீ. தூரம் பறந்து செல்லும் தட்டான் பூச்சி வகைகள், நிலா அந்து பூச்சி, பூச்சிகளை சாப்பிடும் தாவரங்கள், எகிப்து நாட்டில் அரசர் பயன்படுத்திய பூச்சி டாலர், வேதங்களில் பூச்சிகளின் பயன்பாடுகள், பூச்சிகள் குறித்த சினிமா மற்றும் புத்தகங்கள் ஆகியவையும் இங்கு காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.

    வேளாண் பல்கலைக்கழக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை பார்த்து மகிழலாம். பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.30-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    என வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #insectmuseum #Coimbatore

    Next Story
    ×