search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    47-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம்- குழந்தைகளுடன் பெண்கள் பங்கேற்பு
    X

    47-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம்- குழந்தைகளுடன் பெண்கள் பங்கேற்பு

    தூத்துக்குடி மாவட்டம் அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 47-வது நாளாக நீடிக்கிறது. #SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்திக்காக ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது.

    இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணி தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். அதனை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது. அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 12-ந்தேதி தூத்துக்குடியில் தர்ணா போராட்டம் நடத்தினர். மறுநாள் தங்களது கிராமத்தில் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தை தீவிரமாக்க போராட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அழைப்பின் பேரில் தூத்துக்குடியில் கடந்த 24-ந்தேதி கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரி மாணவர்களை திரட்டி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

    அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.

    அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். 46-வது நாளான நேற்று அரசு விடுமுறை என்பதால் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடுவதாக அந்த ஆலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 26-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு தாமிர உற்பத்தி பணி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பராமரிப்பு பணியை காரணம் காட்டி 15 நாட்கள் மூடப்பட்டிருப்பது ஆலைக்கு எதிரான போராட்ட வேகத்தை குறைக்கும் செயல் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் 47-வது நாளாக இன்று நடந்தது.


    இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக அங்கேயே சமையல் செய்யப்பட்டது. அவர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டவாறு போராட்டத்தை தொடர்ந்தனர். அந்த பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டிருப்பதால் போராட்ட குழுவினருக்கு வெளியில் இருந்து சுத்திரிக்கப்பட்ட குடிநீர் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டது.

    போராட்ட குழுவை சேர்ந்த பெண்கள் இதுபற்றி கூறுகையில், ‘எங்கள் உணர்வுகளை அரசுக்கு தெரியபடுத்தும் விதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் முழுமையாக மாசுப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வரும் நச்சு புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.

    தற்போது ஸ்டெர்லைட்டை பராமரிப்பு பணிக்காக மூடுவதாக கூறியிருப்பது கண் துடைப்பு நாடகம். இந்த நச்சு ஆலையை எங்கள் பகுதியில் இருந்து விரட்டும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். #Thoothukudi #Sterlite #SterliteProtest  #BanSterlite #TalkAboutSterlite #Tamilnews
    Next Story
    ×