search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. படிப்பு மீது நம்பிக்கை போய் விட்டது - மாணவர்கள் ஆவேசம்
    X

    சி.பி.எஸ்.இ. படிப்பு மீது நம்பிக்கை போய் விட்டது - மாணவர்கள் ஆவேசம்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதால் சி.பி.எஸ்.இ. மீது நம்பிக்கை போய் விட்டது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். #CBSE #CBSEPaperLeak
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. என்னும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானது. இதையடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சி.பி.எஸ்.இ. மாணவ- மாணவிகள் மிகுந்த கவலையும், வேதனையும் அடைந்து உள்ளனர்.

    இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். சென்னையில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் கூறியதாவது:-

    பிரியா:- 10-ம் வகுப்பு கணித தேர்வு எப்படி இருக்குமோ எஎன்று பதட்டத்துடன் தேர்வு மையத்துக்கு சென்றேன். வினாத்தாளை வாங்கி பார்த்த போது மிக எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். அனைத்து கேள்விகளும் பாடப்பகுதியில் இருந்து நேரடியாக கேட்கப்பட்டு இருந்தன. இதனால் சராசரி மாணவர்கள் கூட அதிக மதிப்பெண் எடுக்க முடியும்.

    தேர்வினை நன்றாக எழுதி விட்டு வெளியே வந்து வினாத்தாள் எளிதாக இருந்ததை தோழிகளுடன் பரிமாறி கொண்டோம். 100-க்கு 95 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

    சிறிது நேரத்தில் இந்த மகிழ்ச்சி பறிபோய் விட்டது. கணித வினாத்தாள் டெல்லியில் முன்கூட்டியே வெளியானதால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற தகவல் வெளியானது. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    எந்த மாநிலத்தில் தவறு நடந்ததோ அங்கு மறுதேர்வு நடத்தினால் பரவாயில்லை. ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் மீண்டும் தேர்வு எழுத கூறுவது என்ன நியாயம். யாரோ செய்த தவறுக்கு நாங்கள் பலிகடாக ஆகி இருக்கிறோம். மீண்டும் தேர்வு எழுத கூறுவது ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஒரு ஆண்டாக படித்து தேர்வு முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மீண்டும் தேர்வு எழுதினால் வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற அச்சம் உள்ளது. பொதுவாக கடினமாக இருப்பதற்குதான் வாய்ப்பு அதிகம்.

    தேவையில்லாமல் எங்களை மறுதேர்வு எழுத கூறுவது வேதனை அளிக்கிறது. வினாத்தாள் வெளியானதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    திவ்யா:- இரவு-பகல் பார்க்காமல் நாங்கள் படித்து வந்தோம். இப்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்பது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுத்துள்ளது. மீண்டும் கணித பாடத்தை படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். கணித பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்ற கனவு கண்டு இருந்தோம். அது சுக்கு நூறாக சிதறியது. மீண்டும் தேர்வா? படிக்க வேண்டுமா? என்ற சலிப்பு எங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் செயல்பாடு வருத்தம் அளிக்கிறது. வினாத்தாள் முன்கூட்டியே எப்படி வெளியானது? அதற்கு யார் காரணம்? சி.பி.எஸ்.இ.யின் அலட்சிய போக்குதான் இதற்கு காரணம். இதனால் எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் எழுதுவது சாதாரண பள்ளி தேர்வாகும்.

    மருத்துவ படிப்பில் சேருவதற்கும் டாக்டர்கள் உயர் கல்விக்கு நீட் என்னும் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்துகிறது. வினாத்தாள் வெளியானதால் சி.பி.எஸ்.இ. மீது எப்படி நம்பிக்கை ஏற்படும். உயர் கல்விக்காக போட்டி போட்டு படித்து தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். இது போன்ற தவறு இனி நடக்க கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    மோனிஷா:- தேர்வுக்காக நாங்கள் பல நாட்கள் கண் விழித்து படித்தோம். அவை எல்லாம் வீணாகிவிட்டது. தேர்வு முடிந்து மகிழ்ச்சியாக விடுமுறையில் வெளியூர் செல்லலாம் என்று எண்ணுவது உண்டு. ஆனால் அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டையாக மறுதேர்வு என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு மனஉளைச்சலை கொடுத்து இருக்கிறது. எப்போது தேர்வு என்ற எதிர்பார்ப்புக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். எங்களது மகிழ்ச்சிகளை ஓரம் தள்ளி விட்டு திரும்பவும் படிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #CBSE #CBSEPaperLeak
    Next Story
    ×