என் மலர்
செய்திகள்

மண்ணடியில் இரும்பு கடையில் ஊழியர்களை கட்டிப்போட்டு முகமூடி கொள்ளை
ராயபுரம்:
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 66). மண்ணடி செம்புதாஸ் தெருவில் இந்தியன் ஸ்டீல் டிரேடர்ஸ் என்ற பெயரில் இரும்பு, ஸ்டீல் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். முதல் மாடியில் இதன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக கட்டுமான நிறுவனத்தினர் இங்கிருந்து இரும்பு கம்பிகள் மற்றும் ஸ்டீல் பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
வாரம் தோறும் சனிக் கிழமைகளில் இந்த நிறுவன ஊழியர்கள் கட்டுமான நிறுவனத்தினரிடம் சென்று பணம் வசூல் செய்து வருவார்கள். இந்த கடையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு 11 மணி அளவில் கடை உரிமையாளரும், வேலை செய்யும் ஊழியர்கள் சிலரும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்கள். பணம் வசூல் செய்து கொண்டு வந்த ஊழியர்கள் மணிமாறன், தினேஷ், மகாலிங்கம், மகாராஜன் ஆகியோர் முதல் மாடியில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்து பணத்தை சரிபார்த்துக் கொண்டு இருந்தனர்.
இரவு 11.15 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் முதல் மாடியில் உள்ள அலுவலகத்துக்கு வந்தது. அவர்கள் கைக்குட்டையை முகமூடி போல கட்டி இருந்தனர். அவர்கள் திடீரென்று அங்கிருந்த 4 ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினார்கள்.
மகாராஜனின் தலையில் கத்தியால் வெட்டினார்கள். அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் அவரையும் மற்ற ஊழியர்களையும் தாக்கி அலுலலகத்துக்குள் கட்டிப் போட்டனர். பின்னர் அலுவலகத்தில் வசூல் செய்து வைத்திருந்த ரூ.52 லட்சம் பணத்தை அவர்கள் கொள்ளையடித்தனர்.
பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதற்கிடையே கொள்ளையர்களால் தாக்கப்பட்ட கடை ஊழியர்கள் கூச்சல் போட்டனர். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கத்தியால் வெட்டியதால் காயம் அடைந்த மகாராஜனை உடனடியாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ராக்சி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி அங்கிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
கொள்ளையர்களை பிடிப்பதற்காக பூக்கடை உதவி கமிஷனர் ஜான் அருமைராஜ் உத்தரவின் பேரில் எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர்கள் சரவண பிரபு, ஜூலியட் சீசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பகுதியில் இருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள் முகமூடி அணிந் திருந்ததால் உருவம் தெரியவில்லை.
இந்த கொள்ளை சம்பவத்துக்கும் கடை ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கடை ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






