search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரி அருகே காட்டுப்பன்றி பிடிக்க வைத்த மின் வலையில் சிக்கி வாலிபர் பலி
    X

    சூளகிரி அருகே காட்டுப்பன்றி பிடிக்க வைத்த மின் வலையில் சிக்கி வாலிபர் பலி

    சூளகிரி அருகே காட்டுப்பன்றிகளை பிடிக்க வைத்திருந்த மின்வலையில் உயர் அழுத்த மின்சாரம் செலுத்தப்பட்டு இருந்ததால் வாலிபர் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேடுபள்ளிகாடு கிராமத்தை சேர்ந்தவர் குட்டியப்பா. இவருடைய மகன் சிவராஜ் (வயது 25). கூலி தொழிலாளி.

    இவர் இரவு நேரங்களில் 4 அல்லது 5 பேருடன் சேர்ந்து பன்றி வேட்டைக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று இரவு சிவராஜ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப் பன்றிகளை மின் வலை வைத்து பிடிப்பதற்காக வேட்டைக்கு சென்றார்.

    அவர்கள் மேடுபள்ளிகாடு -டேம் எப்.பள்ளம் ஆகிய இடைப்பட்ட பகுதியில் வனப் பகுதியையொட்டியுள்ள பெங்களூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்காக மின் வலையை வைத்தனர். இதற்காக மின்சாரம் வனப்பகுதி வழியாக செல்லும் ஒரு மின் கம்பத்தில் இருந்து திருட்டுத் தனமாக கொக்கிப்போட்டு எடுத்ததாக தெரிகிறது.

    இதையடுத்து சிவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் டார்ச் விளக்குகளை கையில் வைத்துக் கொண்டு, மலையில் இருந்து இறங்கி வரும் பன்றிகளுக்காக ஆங்காங்கே மறைவான இடத்தில் பதுங்கி இருந்தனர்.

    தோட்டத்தில் பல ஏக்கர் அளவில் கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்கள் உள்ளன. இதை மையமாக வைத்து இந்த தோட்டத்தில் மின்வலையை அவர்கள் வைத்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தோட்டத்தில் வைத்திருந்த மின் வலையில் பன்றிகள் எதுவும் சிக்கவில்லை.

    இதனால் வலையில் வயர்கள் சரியாக பொருத்தாமல் உள்ளதா? அல்லது ஏதேனும் கோளாறு ஏற்பட்டு இருக்குமோ? என சந்தேகம் அடைந்த சிவராஜ் உடனே மின் வலையை பார்த்து விட்டு வருவதற்காக அங்கு சென்றார்.

    அப்போது சிவராஜ் எதிர்பாராதவிதமாக தாங்கள் வைத்திருந்த மின் வலையிலேயே சிக்கினார். மின்வலையில் உயர் அழுத்த மின்சாரம் செலுத்தப்பட்டிருந்ததால் கண் இமைக்கும் நேரத்திற்குள் சிவராஜ் உடல் முழுவதும் மின்சாரம் பரவியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    இதை பார்த்ததும் உடன் சென்ற அவரது நண்பர்கள் தங்களை போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊர் பொதுமக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிவராஜ் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவருடன் பன்றி வேட்டைக்கு சென்றவர்கள் யார்? யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பன்றி வேட்டைக்கு சென்று மின் வலையில் சிக்கி பலியான சிவராஜிக்கு சுதா(20) என்ற மனைவியும், திரிஷா(7), சுபாஸ்ரீ(1) ஆகிய2 மகள்களும், சுனில்குமார்(3) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் முதல் மகள் திரிஷா அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 2-வது மகன் சுனில்குமார்(3), மகள் சுபாஸ்ரீ(1) ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வருகின்றனர்.

    கணவர் இறந்த தகவலை அறிந்ததும் சுதா ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள கணவர் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். குழந்தைகளும் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதை பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து சூளகிரி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மரவள்ளி கிழங்கு, நிலக்கடலை, கேரட் உள்ளிட்ட பயிர்களை தின்பதற்காக காட்டுப் பன்றிகள் பசியின் காரணமாக மலையில் இருந்து இறங்கி வந்து விளை நிலங்களில் புகுந்து விடும். இவற்றை மறைந்து இருந்து வேட்டையில் ஈடுபடும் நபர்கள் விரட்டும் போது அது மின் வலையில் சிக்கி இறந்து விடும்.

    இப்படி சிலர் மின் வலை அல்லது நாட்டு துப்பாக்கியால் சுட்டு பிடித்து அதனை கொண்டு வந்து சூளகிரி பகுதியில் விற்பனை செய்வார்கள். சிலர் நாட்டு பன்றி இறைச்சியுடன், காட்டுப் பன்றி இறைச்சியையும் கலந்து விற்பனை செய்து விடுகிறார்கள். காட்டுப்பன்றி இறைச்சி இப்பகுதிகளில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. பன்றிக்கு வைத்த மின் வலையில் சிக்கி இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் சூளகிரி பகுதியில் இறந்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×