search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் போலீஸ்காரரை தாக்கிய 6 வாலிபர்கள் கைது
    X

    கன்னியாகுமரியில் போலீஸ்காரரை தாக்கிய 6 வாலிபர்கள் கைது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய ஆறு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பலர் மாலை நேரத்தில் திரிவேணி சங்கமம் மற்றும் கடற்கரையில் கூடிநின்று கடலின் அழகை ரசித்தபடி இருந்தனர். அப்போது கோவையில் இருந்து வந்திருந்த சில வாலிபர்கள் கடலில் இறங்கி குளியலில் ஈடுபட்டனர்.

    அவர்களில் சிலர் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று அங்கிருந்த வழுக்கு பாறையில் ஏறினர். அவர்களை கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் எச்சரித்தனர்.

    ஆனால் கோவை வாலிபர்கள் அனைவரும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி மீண்டும், மீண்டும் பாறையில் ஏறி சாகசம் செய்தனர். அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் போலீசார் மீண்டும், மீண்டும் வாலிபர்களை கரைக்கு வரும்படி அழைத்தனர்.

    அதோடு விசில் அடித்து அவர்களை உடனே கரை திரும்பும்படி கூறினர். மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்காரர் லாஸ்குமார் (27) என்பவர் கடலுக்குள் இறங்கி பாறையில் ஏறிய வாலிபர்களை கரைக்கு வரும்படி அழைத்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், போலீஸ்காரர் லாஸ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதை கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மற்ற போலீசார் ஓடிவந்தனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றவர்களில் கோவை, திருப்பூர் மற்றும் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பிரபு (35), பொன்னுசாமி (22), பூபதி (21), மணிகண்டன் (21), இளங்கோ (29), சூர்யா (21) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். குனியமுத்தூரை சேர்ந்த முத்துராஜ் (23) என்பவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.

    இவர்கள் மீது போலீஸ்காரர் லாஸ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×