என் மலர்

  செய்திகள்

  கொசஸ்தலை ஆறு 40 வருடத்துக்கு முன் சுத்தமாக இருந்தது: கமல்ஹாசன் ஆதங்கம்
  X

  கொசஸ்தலை ஆறு 40 வருடத்துக்கு முன் சுத்தமாக இருந்தது: கமல்ஹாசன் ஆதங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொசஸ்தலை ஆறு 40 வருடத்துக்கு முன் பட பிடிப்புக்காக குதித்த போது சுத்தமாக இருந்தது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  வடசென்னை பகுதியில் எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. தெளிந்த நீரோடையாக இருந்த இந்த ஆறு இப்போது கழிவுகளால் முற்றிலும் பாதிக்கப்பட்டு சாக்கடை ஆறு போல் மாறி இருக்கிறது.

  இந்த விபரம் நடிகர் கமல்ஹாசன் கவனத்துக்கு இது கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவர் கொசஸ்தலை ஆற்றுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து டுவிட்டர் தளத்தில் கருத்துகளை பதிவு செய்திருந்தார்.

  நேற்று அவர் கொசஸ்தலை ஆற்று பகுதிக்கு நேரடியாக சென்று சுற்றுச்சூழல் பாதிப்பை பார்வையிட்டார். பொது மக்களிடமும் இதுபற்றி விசாரித்தார்.

  அப்போது நிருபர்களிடம் கூறிய கமல்ஹாசன் நான் இந்த பகுதிக்கு ஏற்கனவே வந்திருக்கிறேன். 1977-ம் ஆண்டு இந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடியது. மிகவும் ஆழமாகவும் இருந்தது.


  அப்போது மரோ சரித்திரா பட சூட்டிங்குக்காக நான் இங்கு வந்திருந்தேன். டைரக்டர் பாலசந்தர் இங்குள்ள ரெயில்வே பாலத்தில் இருந்து என்னை ஆற்றில் குதிக்க சொன்னார்.

  அப்போது நன்றாக இருந்த ஆறு இப்போது தண்ணீரே இல்லாமல் சேறும், சகதியுமாக மாறி இருக்கிறது. உள்ளே இறங்கினால் சேற்றில் சிக்கி கொள்ளும் அளவுக்கு மோசமாக இருக்கிறது.

  இதற்கெல்லாம் கழிவுகளை ஆற்றில் கொட்டியதும், சுற்றுச்சூழல் பாதிப்பும்தான் காரணம் என்று கூறினார்.

  கமல்ஹாசனுடன் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம் வந்திருந்தார். அவர்தான் கமல்ஹாசனை இங்கு அழைத்து வர காரணமாக இருந்தார்.

  அவர் கமல்ஹாசனிடம் அந்த பகுதியில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூலம் பறந்து வந்த சாம்பல்கள் 700 ஏக்கர் நிலத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை காண்பித்தார்.

  அப்போது காட்டுப்பாக்கம் பகுதி பெண்கள் கமல்ஹாசனிடம் அங்குள்ள 3 அனல்மின் நிலையங்களில் இருந்து பறந்து வரும் சாம்பல்கள் அந்த பகுதி முழுவதும் தரையில் படிந்து சுற்றுச் சூழலை கடுமையாக பாதித்து இருக்கிறது என்று கூறினார்கள்.

  பின்னர் கமல் ஹாசனுடன் சென்றிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம் இது சம்பந்தமாக கூறியதாவது:-

  தொழிற்சாலைகளால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மட்டும் அல்லாமல் கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை பகுதி சாக்கடை கழிவுகளும் கலக்கிறது. இதனால் நிரந்தரமாக ஆறு பாழ்பட்டு விட்டது. இது, இந்த பகுதி மக்களின் வாழ் வாதாரத்தையே பாதித்து இருக்கிறது.

  இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைவதற்கு உதவி செய்யும்படி இந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தார்கள். எனவே, நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்தோம்.

  இந்த பாதிப்புகள் தொடர்பாக முழுமையாக வீடியோ படம் எடுக்கப்பட்டது. அந்த காட்சிகள் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதை பார்த்த அவர் இங்கு ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையை நன்றாக உணர்ந்து கொண்டார். இதன் மீது அக்கறையுடனும், ஆர்வத்துடனும் செயல்பட்டார்.


  நான் ஒரு வாரத்துக்கு முன்பு கமல்ஹாசனை சந்தித்தேன். இதற்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

  இங்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சுழல் பாதிப்புகளுக்கு இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள பல்வேறு விதிமுறை மீறல்தான் காரணமாகும். அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் உள்ள குடிசை வீடுகளை எல்லாம் அகற்றி இருக்கிறார்கள்.

  அதே நேரத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமிப்பு செய்வதற்கு அரசே சாதகமாக இருந்துள்ளது.

  மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிற்சாலைகள் ஆற்றின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. வெள்ளத்துக்கு இது, லைசென்ஸ் பெற்று ஆக்கிரமிக்கப்பட்டதா? லைசென்ஸ் இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டதா? என்பதெல்லாம் தெரியாது.

  ஆனால், இங்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பால் இங்குள்ள 10 லட்சம் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இது மட்டும் அல்ல, சென்னை நகரத்துக்கே இது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இங்கு சுற்றுச் சூழல் பாதிப்பு மிக கடுமையாக இருக்கிறது.

  கொசஸ்தலை ஆற்றின் பகுதியில் உள்ள 1400 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அதில், 600 ஏக்கர் நிலம் காமராஜர் துறைமுகத்துக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

  மாநில கடற்கரை மேலாண்மை அமைப்பு இந்த பகுதியில் உள்ள வரைபடத்தையே மாற்றி அமைத்துள்ளனர்.

  அதாவது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் கொசஸ்தலை ஆற்றின் பகுதி அல்ல என்பது போல் வரைபடத்தை போலியாக தயாரித்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. தவறான வரைபடத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பே நடக்க வில்லை என்பது போல் காட்ட முயற்சிக்கிறார்கள்.

  இந்த பகுதி சதுப்புநில பகுதி. எனவே, இங்கு எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் செய்ய கூடாது என்று 1996-ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், அதையும் மீறி இங்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அமைத்து ஆற்று பகுதியை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×