search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: மதுசூதனன் பேட்டி
    X

    சசிகலா சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: மதுசூதனன் பேட்டி

    சசிகலா சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.
    கடலூர்:

    அ.தி.மு.க. அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். நான்தான் அ.தி.மு.க. என்று கூறிவரும் தினகரனிடம் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை உள்ளதா? அவர் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதோடு, நாடாளுமன்றத்துக்கும் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

    1983-ம் ஆண்டு வரை வாடகை வீட்டில் இருந்தவர்தான் சசிகலா. தற்போது சசிகலாவுக்கும் நடராஜனுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். தினகரன் கையில் இன்னமும் அதிகாரம் உள்ளது. உளவுத்துறை தகவல்கள் அவருக்கு வருகிறது. எனவே அவர் கூறுவது (தை பிறந்தால் வழிபிறக்கும்) உண்மையாக கூட இருக்கலாம்.

    நடிகர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறார்களா? அல்லது அவர்கள் அடிமட்ட தொண்டர்களின் பிரச்சினைகளுக்காக போராடி சிறை சென்றுள்ளனரா?

    சிறை செல்வது மட்டுமே அரசியலுக்கான அடிப்படை தகுதி இல்லை. எந்த விதமான போராட்டமும் செய்யாமல் அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

    உண்மையான அ.தி.மு.க. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது. இதனால் எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதன் பின்னர் தற்போது இருக்கும் மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×