search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற மத்திய அரசு ஒத்துழைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற மத்திய அரசு ஒத்துழைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள அவினாசி லிங்கம் கல்வி அறக் கட்டளை நிறுவன இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் புதிய இந்தியா என்ற தலைப்பில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க சாதிக்க சபதம் ஏற்போம் என்கிற விழிப்புணர்வு கருத்தரங்கம் அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்துப் பேசினார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக தலைவர் ப.குமார வடிவேல் வரவேற்று பேசினார்.

    கருத்தரங்கில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கலந்துக்கொண்டு கருத்தரங்கை தொடக்கி வைத்துப்பேசினார்.

    நாட்டில் இருக்கும் ஒவ்வொரு துறையும் பல மடங்கு உயர வேண்டும் என்பது தான் பிரதமரின் கனவாகும். தமிழ்நாட்டில் விவசாயிகளின் குறைகளை தீர்க்க நீர்வளத்திற்கு மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.600 கோடி வாங்கிக் கொடுத்துள்ளது. 7 அம்சத்திட்டத்தை பாலை வனத்திலேயே நடைமுறைப்படுத்தியவர் நம் பிரதமர். எந்த இடத்தில் நதிநீர் போய்ச்சேர வேண்டுமோ அந்த இடத்திற்கு போய் சேரும்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தை எத்தனை வீடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை கூற முடியுமா? மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைப்பற்றி இங்கே பேசியவர்கள் கூறினார்கள். இந்த திட்டம் பற்றி தமிழக அரசு மத்திய அரசிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

    விவசாயத்திற்கு என்ன தேவை என்பது பற்றி சிந்திக்க வேண்டும். தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும். பிரதமரின் கனவு நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அவரது கருத்துக்களை நிறைவேற்ற சபதம் ஏற்போம். தமிழ்நாட்டின் மீது அதிக பற்று கொண்டவர் பிரதமர். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள் உங்களோடு ஒத்துழைக்க பிரதமர் உள்ளார்.

    இவ்வாறு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

    கருத்தரங்கில் தமிழக வேளாண்பல்கலைக்கழக கல்வி இயக்குனர் எச்.பிலிப் கோவை வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் கே.ராமசாமி ,ஏ.கே.செல்வராஜ் எம்.பி., ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×