search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3.35 கோடி பேரின் ஆதார் எண், பான் கார்டுடன் இணைப்பு - காலக்கெடு இன்றுடன் நிறைவு
    X

    3.35 கோடி பேரின் ஆதார் எண், பான் கார்டுடன் இணைப்பு - காலக்கெடு இன்றுடன் நிறைவு

    நாடு முழுவதும் 3 கோடியே 35 லட்சம் பேர் ஆதார் கார்டு எண்ணை தங்கள் பான் கார்டு எண்ணுடன் இணைத்துள்ளனர். இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    சென்னை:

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் கார்டு எண்ணுடன். பான் கார்டு எண்ணை கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. வருமான வரித்துறை இணையதளத்தில் அதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

    ஒரே நேரத்தில் பலரும் ஆதார் கார்டு எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் இணையதளம் முடங்கியது. இதனால் கால அவகாசம் ஜூலை 31-ந்தேதி வரை வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று மீண்டும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை காலநீடிப்பு செய்யப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

    இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்தில் ஆதார் எண்ணை குறிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அனைவரும் ஆதார் எண்ணை குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பான் கார்டு எண்ணுடன் இணைத்தால் மட்டுமே வருமான வரி கணக்கு படிவம் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நாடு முழுவதும் 6 கோடியே 30 லட்சத்து 88 ஆயிரத்து 799 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமானவரி அலுவலகத்தில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்துள்ளனர். இதில் 3 கோடியே 35 லட்சத்து 7 ஆயிரத்து 117 பேர் மட்டுமே பான் கார்டு எண்ணுடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்து பதிவு செய்யாத 1 கோடியே 72 லட்சத்து 20 ஆயிரத்து 511 பேர் தங்கள் ஆதார் கார்டு எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ளனர்.

    இணைக்காதவர்கள் இன்று இணைத்து கொள்ளலாம். வருமான வரித்துறை அலுவலகத்துக்கு தான் வரவேண்டும் என்பதில்லை. ‘ incometaxindiafiling.gov.in’ என்ற இணையதள முகவரிக்கு சென்று ‘link aadhaar’ என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ‘கிளிக்’ செய்து, கூறப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஆதார் கார்டு எண்ணையும், பான் கார்டு எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.

    செல்போன் உதவியுடன் இணைக்க விரும்புபவர்கள் செல்போனில், UIDPAN என ‘டைப்’ செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் கார்டு எண், மீண்டும் இடைவெளிவிட்டு, பான் கார்டு எண் ஆகியவற்றை, ‘டைப்’ செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பினாலும் இரண்டு எண்களையும் இணைக்க வாய்ப்பு உள்ளது. மீண்டும் காலஅவகாசம் வழங்குவது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வரவில்லை.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×