என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமியின் கடைசி சட்டசபை கூட்டம்: மைத்ரேயன் எம்.பி. பேட்டி
    X

    முதல்வர் பழனிசாமியின் கடைசி சட்டசபை கூட்டம்: மைத்ரேயன் எம்.பி. பேட்டி

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கடைசி சட்டசபை கூட்டத் தொடர் இது என்று ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் வருகிற 23-ந்தேதி எம்.ஜி. ஆர். பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்த செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் மைத்ரேயன் எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    23-ந்தேதி ஆடி அமாவாசை அன்று நடைபெறும் இந்த கூட்டம் ஒரு திருப்பு முனை கூட்டமாக அமையும். குடியரசு தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்கள் வரும் என்று பரவலாக தமிழகத்தில் பேசப்படுகிறது.

    கூவத்தூர் கட்சியின் இந்த சட்டமன்ற கூட்டத் தொடர்தான் கடைசியாக அமையும். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும். ஓ.பன்னீர் செல்வம் மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

    நடிகர் கமலஹாசன் போன்ற பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துக்களை கூறலாம். ஏனென்றால் இது ஜனநாயக நாடு.

    ஊழலுக்காக சிறை தண்டனை பெற்ற ஒருவர் அங்கு சொகுசாக வாழ்வதற்கு அங்கும் லஞ்சம் கொடுத்தது மிக பெரிய குற்றம். அதனை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவை பணியிடம் மாற்றம் செய்தது மிகவும் தவறு. இதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், டாக்டர் ஜி.சம்பந்தம், புத்தளி ஞானசேகரன், வழக்கறிஞர் ஆர்.வி.உதயன், பிரேமா ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×