என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் பயணத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரத்து செய்தது ஏன்?
    X

    காஞ்சீபுரம் பயணத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரத்து செய்தது ஏன்?

    பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரம் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் (24-ந் தேதி) காஞ்சீபுரம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு பின்னர் காஞ்சி சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திப்பார் என்றும் பின்னர் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு மாணவ-மாணவிகள் இடையே பிரணாப்முகர்ஜி உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.



    ஜனாதிபதி வருகையொட்டி மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கோவில்களில் பாதுகாப்பு மற்றும் முன் ஏற்பாடு பணிகளை கடந்த சில தினங்களாக கவனித்து வந்தனர்.

    இதற்காக சின்ன காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி முழு வீச்சில் நடத்தி முடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் காஞ்சீபுரம் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

    காஞ்சீபுரத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ள காரணத்தால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே காஞ்சி சங்கரமடத்தில் இருந்து அழைப்பு விடுக்கவில்லை என்றும் தெரிகிறது.

    காஞ்சிபுரம் பயணத்தை ரத்து செய்து பிரணாப் முகர்ஜி நாளை ஊட்டி செல்கிறார். ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.20 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்கிறார்.

    பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி சென்று பள்ளி விழாவில் பங்கேற்கிறார். அவருடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் பலர் பங்கேற்கிறார்.

    ஆண்டு விழா முடிந்ததும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்கிறார். மறுநாள்(புதன் கிழமை) காலை ஊட்டி தாவரவியல் பூங்கா சென்று பார்வையிடுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பும் அவர் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×