என் மலர்

    செய்திகள்

    போளூர்- கலசப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் முற்றுகை
    X

    போளூர்- கலசப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் முற்றுகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போளூர்- கலசப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையின் முன்பாக திரண்ட கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள மண்டகொளத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையினால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்துக்கு கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 1-ந் தேதி மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் கடையின் முன்பாக போராட்டம் நடத்தினர். ஆனால் டாஸ்மாக் கடையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையின் முன்பாக திரண்டனர். பின்னர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற இடம் பார்த்து கொண்டிருப்பதாவும், இன்னும் 20 நாட்களுக்குள் வேறு இடத்துக்கு டாஸ்மாக் கடையை மாற்றி விடுவதாக டாஸ்மாக் நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கலசபாக்கம் லாடவரம் கிராமத்தில் கோவில், அரசு பள்ளி அருகேயும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் பெண்கள் அந்த வழியாக செல்லும்போது தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே, டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் கடையை முற்றுகையிட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று கூறினர். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் டாஸ்மாக் கடை வேறு பகுதிக்கு மாற்றப்படவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த லாடவரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் 3 நாட்களில் டாஸ்மாக் கடை அகற்றப்படும். அதுவரை கடை திறக்கப்படாது என தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பள்ளிகொண்டா அருகே கந்தனேரி கூட்ரோடு அணைக்கட்டு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக அதே சாலையில் 15 நாட்களுக்கு முன் மற்றொரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணைக்கட்டு சாலையில் 2-வதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிகொண்டா போலீசார் அங்கு சென்று டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு கொடுத்தனர். போலீசாரையும் மீறி டாஸ்மாக் கடையை உடைக்க பொதுமக்கள் முற்பட்டனர்.

    இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் போலீசாரை கீழே தள்ளியும் மணல் மற்றும் கற்களை வீசி கடைக்குள் புகுந்து அங்கிருந்த குளிர்சாதன பெட்டியை உடைத்து அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து இறைவன்காடு காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஹேமகுமார் (வயது23), கழனிப்பாக்கம் ரவீந்தரன் (37), முருகன் (28), சந்துரு (26), கந்தனேரி தண்டபாணி (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 20-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×