என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்திய 13 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது
    X

    மணல் கடத்திய 13 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது

    வேலூரில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 13 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களையும் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரும், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் முதல் சுங்குவார் சத்திரம் வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை சோதனை செய்தனர். அந்த லாரிகளின் மேல் பகுதியில் ஜல்லி கற்கள் காணப்பட்டன. அதனுள் தோண்டி பார்த்த போது மணல் இருந்தது.

    இதே போல் 13 கனரக லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த மணலை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பாலாற்றில் இருந்து திருட்டுத்தனமாக லாரியில் அள்ளிக் கொண்டு சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்திய 13 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மணல் கடத்தியதாக மணல் லாரி டிரைவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பெரியபாளையம் அருகே ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் இரவு-பகலாக ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மணல் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் சப்-கலெக்டர் திவ்யஸ்ரீ தலைமையில் வருவாய்துறையினர் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெரிய பாளையம் அருகே எர்ணாகுப்பம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகளையும், கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லாரிகள்,ஒரு ஜெ.சி.பி எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×