search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி கவியருவிக்கு 2 நாளில் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
    X

    பொள்ளாச்சி கவியருவிக்கு 2 நாளில் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

    • பொள்ளாச்சி அருகே பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.
    • கவியிருவியில் பல நாட்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

    இங்கு தினமும் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதி எப்போதுமே பரபரப்பாகவும், மக்கள் கூட்டம் அதிகமாகவும் காணப்படும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கவியிருவியில் பல நாட்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    வெள்ளம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வருகின்றனர்.விடுமுறை தினமான நேற்று கவியருவியில் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக கார், வேன் உள்ளிட்டவற்றில் வந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

    பின்னர் ஆழியார் அணைக்கு சென்று அணையை பார்வையிட்டனர். மேலும் ஆழியார் பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.

    கடந்த 2 நாளில் மட்டும் கவியருவிக்கு 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 950க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். சோதனை சாவடி மூலம் வனத்துறையினருக்கு ரூ.47 ஆயிரம் வரை கட்டண தொகை வசூலாகியுள்ளது.

    Next Story
    ×