search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 19-ந்தேதி திருமணிமுத்தாறு ஆரத்திவிழா
    X

    கூட்டத்தில் தெய்வீக தமிழ் சங்க நிறுவனர் செம்முனி பேசியதையும், கூட்டத்தில் பங்கேற்ற அமைப்பினரையும் படத்தில் காணலாம்.

    சேலத்தில் 19-ந்தேதி திருமணிமுத்தாறு ஆரத்திவிழா

    • வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா.
    • நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு மலையில் பிறக்கிறது திருமணி முத்தாறு. இந்த நதி சேலம் நகரத்தில் நுழைந்து சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக சுமார் 120 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே நஞ்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது.

    மிகவும் பழமையான, புனிதம் நிறைந்த இந்த நதி, மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்து எடுக்கப்பட்டது. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள்.

    அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது.

    சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று 'சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்' என்கிறது.

    திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.

    இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.

    திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். தற்போது இந்த நதி சுருங்கி சாக்கடைகளால் புனிதம் கெட்டு காட்சியளிக்கிறது.

    இந்த நதியின் புனிதத்தை காக்கவும், இழந்த அதன்பெருமைகளை மீட்டெடுக்கவும் ஆன்மீக அமைப்புகள் திரண்டுள்ளன. அதன் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா நடத்தவும், நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலத்தில் இன்று நடை பெற்றது. இதில் பல்வேறு சங்கங்கள், சமூக, ஆன்மீக அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருமணி முத்தாறு நதியின் புனிதம் காக்க தீர்மானிக்கப்பட்டது. நதி ஆரத்தி விழாவை பிரமாண்டமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×