search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் 1008  சுமங்கலி பூஜை
    X

    வரலட்சுமி விரதத்தையொட்டி டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று 1,008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

    வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் 1008 சுமங்கலி பூஜை

    • இந்த ஆண்டுக்கான வரலட்சுமி நோன்பு இன்றைய தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடந்தது.

    நெல்லை:

    ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கின்றனர்.

    இந்த ஆண்டுக்கான வரலட்சுமி நோன்பு இன்றைய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி டவுன் நெல்லையப்பர் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் இளைய பாரதம் அமைப்பு சார்பில் 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் உடன் வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×