search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 பேர் உயிரை பலிவாங்கிய பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க வந்த கும்பலை விரட்டியடித்த கிராம மக்கள்
    X

    10 பேர் உயிரை பலிவாங்கிய பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க வந்த கும்பலை விரட்டியடித்த கிராம மக்கள்

    • பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    சிவகாசி:

    சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறியதாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த பட்டாசு ஆலையை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக வருவாய் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த செங்கமலபட்டி கிராம மக்கள் பட்டாசு ஆலை இருக்கும் பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களை விரட்டினர். இதனை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் லோடு ஆட்டோ ஆகிவற்றை விட்டுவிட்டு தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள், லோடு ஆட்டோவை போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா். கிராம மக்கள் ஒப்படைத்த மோட்டார் சைக்கிளில் ஒரு மோட்டார் சைக்கிளில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை விசாரித்து வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி நடைபெற்ற செங்கமலபட்டி பட்டாசு ஆலையில் தற்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பட்டாசு ஆலையில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×