search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 புதிய நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்; முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
    X

    நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தனது உடல் நிலையை பரிசோதனை செய்து கொண்டார்.

    10 புதிய நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்; முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

    • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
    • மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த மருத்துவ சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வண்ணம் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் வீதம் 12 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.

    அதன்படி முதல்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் அண்ணாநகர் 14-வது தெரு, சின்னையாபிள்ளை தெரு, ஏ.ஒய்.ஏ.நாடார் தெரு, பூமால் ராவுத்தன்கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, நாலுகால்மண்டபம் ஆகிய 6 இடங்களிலும், கும்பகோணம் மாநகராட்சியில் திருநாராயணபுரம், மேலமேடு, காசிராமன்தெரு, பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நரியம்பாளையம் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டன.

    பள்ளியக்ரகாரம், டவுன்கரம்பை பகுதியில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதையடுத்து தஞ்சையில் அண்ணாநகர் 14-வது தெரு திறக்கப்பட்ட மையத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டலக்குழு தலைவர்கள் ரம்யாசரவணன், மேத்தா, கலையரசன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மையத்தில் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், சுகாதார பணியாளர் என 4 பேர் பணியில் இருப்பார்கள்.

    காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.

    இந்த மையங்களில் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு வெளிநோயாளிகள் சிகிச்சை, தாய்சேய் நலம், தொற்றா நோய் சிகிச்சைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×