search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் மேம்பாலத்தை மேலும் 1 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க திட்டம்
    X

    தாம்பரம் மேம்பாலத்தை மேலும் 1 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க திட்டம்

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
    • அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    சென்னையின் நுழைவாயிலாக தாம்பரம் இருந்து வருகிறது. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் தாம்பரம் வழியாக செல்கிறார்கள்.

    மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அலுவலகம் செல்பவர்கள் தினமும் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

    வார இறுதி நாட்களில் பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மேம்பாலம் ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப் பாதையை ஒட்டி இறங்குகிறது. கிழக்கு பகுதியில் ரெயில்வே பஸ் நிறுத்தத்தை ஒட்டி ஏறுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வடக்கு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் முனையில் ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆம்னி பஸ் மற்றும் மாநகர பஸ்களும் நிற்பதால் சாலையின் இரு புறமும் மக்கள் நிற்கிறார்கள்.

    சாலையின் கிழக்கு பகுதியில் நடை மேம்பாலம் அருகே உணவு பொட்டலங்கள், தண்ணீர், குளிர் பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

    இதனால் ராஜாஜி சாலை, காந்தி சாலை, சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துரங்கம் முதலி சாலை போன்ற முக்கிய சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தாம்பரம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்தாலும் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்தபடியே உள்ளது.

    மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வடக்கு பகுதியில் மேம்பாலத்தை மேலும் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.

    இத்திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும். ஜி.எஸ்.டி. சாலையின் இரு புறத்திலும் ஏறும், இறங்கும் மேம்பாலத்தை வள்ளுவர் குருகுலம் வரை நீட்டிக்க மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் சண்முகம் சாலை, ராஜாஜி சாலை மற்றும் காந்தி சாலை செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் இருந்து விடுபட லாம். பஸ்கள் மட்டும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும். பிற வாகனங்கள் தடையின்றி மேம்பாலம் வழியாக செல்லலாம்.

    தாம்பரம் மார்க்கெட்டை பல மாடி வணிக வளாகமாக மாற்றவும், அங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் சிறுவர் பூங்கா, கடைகள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள் அமைக்கப்படும் என்றும் பல மாடி கட்டிடத்தின் 3-வது தளத்துடன் இணைக்கப்படும். அங்கு லிப்ட், எஸ்கலேட்டர்கள் கூடுதலாக பார்க்கிங் இடம் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×