search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நமச்சிவாயம்
    X
    நமச்சிவாயம்

    நமச்சிவாயத்துக்கு துணை முதலமைச்சர் பதவி- என்.ஆர்.காங்கிரசிடம் பாஜக வலியுறுத்தல்

    துணை முதலமைச்சர் பதவியை கேட்டுப்பெற்று அந்த இடத்தில் நமச்சிவாயத்தை அமர வைக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு பாதிக்கு மேல் இடங்களை பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்கும் தகுதியை இந்த கூட்டணி பெற்றுள்ளது.

    அந்தவகையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    பாஜக

    இதன்பின் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சரவையில் பா.ஜ.க. இடம் பெறும் என்று தெரிவித்தார்.

    இந்தநிலையில் கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை கவர்னர் மாளிகைக்கு சென்ற ரங்கசாமி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நல்லநேரம் பார்த்து ஓரிரு நாளில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார்.

    புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி இடங்களை கேட்டு பா.ஜ.க. தரப்பில் என்.ஆர்.காங்கிரசை வலியுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    புதுவையை பொறுத்தவரை கடந்த காலங்களில் துணை முதல்-அமைச்சர் பதவி என்பது உருவாக்கப்படாத நிலை தான் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மத்திய உள்துறை மூலம் துணை முதல்-அமைச்சர் பதவியை உருவாக்கிட பா.ஜ.க. பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    துணை முதல்-அமைச்சர் பதவியை கேட்டுப் பெற்று அந்த இடத்தில் நமச்சிவாயத்தை அமர வைக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம் எதிர்காலத்தில் புதுச்சேரியில் கட்சியை பெரிய சக்தியாக வளர்க்க முடியும் என்று பா.ஜ.க. தரப்பில் கருதுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளை பிடிக்க பா.ஜ.க.வில் முட்டி மோதி வருகிறார்கள்.

    அரசியல் சாசன விதிகளின்படி புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த இடங்களை நிரப்பவும் பா.ஜ.க. மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
    Next Story
    ×