என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  பூர்வீகச் சொத்து
  X
  பூர்வீகச் சொத்து

  பூர்வீகச் சொத்துக்களைப் பிரிக்கும் முறை- ஜோதிடச்சுடர் எம்.எஸ் இராமலிங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடக்குப் பார்த்த பூர்வீகச் சொத்தை கிழக்கு நோக்கிய பாகங்களாகப் பிரித்துக் கொண்டால் உரிமையாளர்களுக்கு அனேக நன்மைகள் உண்டாகும் இதுவே வாஸ்துவின்படி நலன் செய்யும்.


  முன்னோர்கள் அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளை, அவர்களின் சந்ததிகளாக வரும் இளையவர்கள், முறையாக பிரித்து, சந்தோ‌ஷமாக வாழவேண்டும் என்ற நோக்கில் முன்னோர்கள் வாஸ்து விதிகளின் படி சில செய்திகளைச் சொல்லி உள்ளார்கள்.

  கிராமங்களில் விவசாய நிலங்கள் ஆனாலும், வீடுகட்டிக் குடியேற தகுதியுடைய மனைகள் ஆனாலும், பூர்வீகச் சொத்துகளை பிரிக்கும் போதுக்கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை இங்கே பார்ப்போம்.

  பொதுவாக கிராமங்களில் இன்றும் கூட சொத்துக்களைப் பிரிக்கும் போது, அண்ணன், தம்பி என, சில குடும்பங்களில் அக்கா, தங்கை என வாரிசுகள் இருக்கும் போது முதல் நபராக உள்ள மூத்தவருக்கு மேற்கு பாகம் அல்லது தெற்கு பாகத்தையும், அதனை அடுத்த அனைவரும் அடுத்தடுத்த பின் பாகங்களைப் பிரித்துக்கொள்வது வழக்கமாக உள்ளதைக் காணலாம்.

  இது ஒரு பொதுவான பழக்கமாக உள்ளதே தவிர, இது வாஸ்துவின் படி முறையானது அல்ல. வாஸ்து சாஸ்திரப்படி உச்சபாகம், நீசபாகம் என எங்கு அமைகிறதோ அதன் அடிப்படையில் மனையை அல்லது விவசாய நிலத்தைப் பிரித்து கொண்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோடை போகாமல் வாழ்ந்து வரலாம்.

  முதலாவதாக கிழக்கு பார்த்த மனையை உடன் பிறப்புக்கள் பிரித்துக் கொள்ளவேண்டுமெனில், அந்தக் குறிப்பிட்ட மனையின் வடபாகத்தில், கிழக்குமுதல் மேற்குவரை உள்ள மொத்த நீளத்திற்கும், உங்கள் வசதிக்கு ஏற்ப நடைபாதை அல்லது சாலை அமைத்துக் கொண்டு, மீதம் அமையும் மொத்த இடத்தையும் நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்களோ, அத்தனை பாகங்களாக, வடக்கு நோக்கிய மனைகளாக பிரித்துக்கொண்டு, இதன்பின் குடும்ப உறுப்பினர்களில் மூத்த நபரானவர் இந்த மனையின் மேற்கு ஓரமாக அமையும் மனையையும் பின் வரும் நபர்கள், மீதமுள்ள மனைகளையும் வரிசைக் கிரமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

  இதனடிப்படையில் மனையை பங்கு வைத்துக் கொண்டால் மொத்த மனையின் வடமேற்கும், தென் மேற்கும் குடும்பத்தின் மூத்த முதல் நபருக்கும், அதேபோல தென்கிழக்கும், வட கிழக்கும் குடும்பத்தின் கடைசி நபருக்கும் கிடைக்கும்.

  எம்.எஸ் இராமலிங்கம்

  சூரிய உதயமாகும் போது, இளையவர் இடத்திலும் அல்லது வீட்டிலும் சூரியன் மறையும் போது குடும்பத்தின் மூத்தவர் இடத்திலும் அல்லது வீட்டிலும் ஒளி விழும்.

  இவ்வாறாக பூர்வீக மனையைப் பிரித்துக் கொண்டு மனையில் வீடு கட்டிக் குடியேறினாலும் சரி அல்லது பூர்வீக விவசாய நிலத்தைப் பங்கிட்டுக் கொண்டாலும் சரி அந்த குடும்பம் செழிப்படையும்.

  இப்படிப் பிரிக்கப்பட்ட மனையின் அல்லது நிலத்தின் வட பாகத்தில் கிணறு வெட்டிக் கொள்வதும் பின்பாகமாகிய நிலத்தில் வீடு அமைத்துக் கொள்வதும், நீண்டகாலம் அந்தக் குடும்பத்தார் அந்த மனையில் வாழ்வதற்கு உத்திரவாதம் ஆகும்.

  இதுபோலவே பூர்வீகச் சொத்தானது பல ஏக்கர் உள்ள விவசாய நிலமானாலும் உடன் பிறப்புகள் இவ்வாறாகவே பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படியாக பிரித்த மனைகள், நிலங்களில் இந்திர பலமும், குபேரபலமும் உண்டாகும்.

  இப்போது தெற்கு பார்த்த பூர்வீக மனை அல்லது விவசாய நிலத்தைப் பிரிக்கும் போதும் வாஸ்துவின் அடிப்படையில் சில விதிகள் உள்ளது.

  அவை யாதெனில், குறிப்பாக ஒரு இடத்தில் தென்மேற்கில், தெற்கு நோக்கி வழித்தடம் அமைக்க முடியாது. இது வாஸ்துப்படி குற்றம். ஆனால் தென் கிழக்கில் தென் எல்லையில் வடக்கு நோக்கி உள்ளே நுழையும்படி வழித்தடம் அமைக்கலாம்.

  இதனடிப்படையில் இந்தக் குறிப்பிட்ட தெற்கு நோக்கிய மனையைப் பிரிக்கும் போது மனையின் கிழக்கு பாகத்தில் தெற்கில் இருந்து வடக்கு எல்லை வரை நீளமாக சாலை அல்லது வழித்தடம் அமைத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட மனையை கிழக்கு பார்த்த மனையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

  இப்படி மாற்றி அமைத்த மனையை எத்தனை பங்குகளாகப் பிரிக்க வேண்டுமோ அத்தனை பாகங்களாக கிழக்கு நோக்கிய மனைகளாகப் பிரிக்கவேண்டும். இதன் பின்னரே நமது வழக்கங்களில் சொல்லப்பட்ட மூத்தவருக்கு மேற்கு அல்லது தெற்கு பாகம் என்ற அடிப்படையில் இந்த மனையை குடும்பத்தில் தலைப்பிள்ளைக்கு தெற்கு ஓரமாக உள்ள மனையும் அதாவது ஏற்கனவே தெற்கில் சாலை உள்ளதால் மனையை பிரித்த பின் மூத்தவரின் மனைக்கு தெற்கிலும் புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்குச்சாலையானது, மூத்தவரின் மனைக்கு கிழக்கிலும் அமையும்படி பிரித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

  இதனைத் தொடர்ந்து உடன் பிறந்த மற்றவர்களுக்கு வடக்கு நோக்கி வரிசைக்கரமாக பிரித்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

  மனையைப் பிரிக்கும்முன் தெற்கு நோக்கி இருந்த மனையானது மனையைப் பிரித்த பின் அதில் வரும் அனைவருக்கும் கிழக்கு நோக்கிய அற்புதமான மனைகள் கிடைக்கும்.

  இப்படி பிரிக்கப்பட்ட மனையில் தெற்கு பார்த்த மனையை அல்லது நிலத்தை நாம் சொன்னது போல கிழக்கு நோக்கிய மனைகளாகப் பிரித்துக் கொண்டால் அந்த மனையில் இந்திர பலமும் சூரியபலமும் உண்டாகும்.

  அந்த மனையில் வசிப்பவர்கள் வயதுக்குத் தகுந்த மகிழ்ச்சியோடும் நோய், வறுமை, துன்பம் ஏதுமின்றி மிகச் சீறும் சிறப்புமாக வாழும் நிலையும் உண்டாகும்.

  குழந்தைகள் கூட மிக உற்சாகமாக துடிப்புடன் செயல்படும் பிள்ளைகளாகவும், உடல், திரேக பலம் கொண்டவர்களாகவும் வளருவார்கள். காரிய சித்தி பெறுவார்கள். எனவே தெற்கு பார்த்த மனையை இவ்வாறு பிரிப்பது சிறப்பு.

  இதுபோல பூர்வீகச்சொத்தாக முன்னோர்கள் மேற்கு பார்த்த நிலம், விவசாய நிலம், வீட்டுமனை என ஏதாவது சொத்து இருக்குமானால் இந்தச் சொத்தை உடன் பிறந்தோர்கள் பிரித்துக் கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விதிகள் யாதெனில், வாஸ்துவின் அடிப்படை விதியாக எந்த ஒரு இடமானாலும் தென்மேற்கில் வாசல் வைப்பது அல்லது தெற்மேற்கில் கேட் வைத்து அந்த இடத்திற்குள் நுழைவது போன்ற அமைப்பைச் செய்யக்கூடாது.

  ஆகையால் இந்த மேற்கு பார்த்த மனையில் வடமேற்கில் மேற்கு எல்லையில் கிழக்கு நோக்கி வடக்கு பாகத்தில் கிழக்கு எல்லை வரை நீளமாக நடைபாதை அல்லது சாலை அமைத்து இந்த புதிதாக அமைத்துள்ள நடைபாதைக்கு தெற்கில் உள்ள உங்கள் மனையை வடக்கு நோக்கிய மனைகளாகப் பிரித்து குடும்பத்தின் மூத்த முதல் நபரானவர், பிரித்த இந்த மனையின் மேற்கில் அமையும் மனையையும் பின்வரும் இளையவர்கள் மீதமுள்ள கிழக்கில் உள்ள மனைகளையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  இவ்வாறு பிரித்துக் கொண்டால் அந்த மனையில் குபேர பலம் உண்டாகி இந்த குறிப்பிட்ட இடத்தில் இந்த மனையை பிரிக்கும் முன்பு தங்களின் முன்னோர்கள் வாழ்ந்ததை விட இந்த மனை பிரிக்கப்பட்ட பின்பு இந்த மனையில் வாழும் அனைத்து வாரிசுகளும் மிக அருமையான சுபிட்சம் அடைவார்கள்.

  விவசாய நிலமானாலும், ரியல்எஸ்டேட் செய்பவர்களாயினும் மேற்கண்ட விதிகளே பொருந்தும். இது போல வடக்கு பார்த்த மனைகளைப் பிரிக்கும் போதும் சிலவிதிகள் உள்ளன.

  அவை யாதெனில், இந்த வடக்கு பார்த்த மனையில், மனையின் கிழக்கு பாகத்தில் வடக்கில் இருந்து தெற்குவரை, வடகிழக்கில் உள்ளே நுழைவது போல சாலை வழித்தடம் அமைத்துக்கொண்டு பின்பு கிழக்குநோக்கிய மனைகளாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.

  இவ்வாறு பிரிக்கப்பட்ட மனைகளில் குடும்பத்தில் முதல் வாரிசு எனும் மூத்தவர் புதிதாக அமைக்கப்பட்ட சாலை வழியாக தெற்கு நோக்கிச் சென்று தெற்கு எல்லையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பிரிக்கப்பட்ட மனையை தனக்கானதாக்கிக் கொண்டு, மீதமுள்ள அடுத்தடுத்த வடபாக மனைகளை தனக்கு பின் வரும் உடன் பிறப்புகளுக்கு தந்து விட வேண்டும். இது வாஸ்துபடி அந்த மனையில் வாழும் அனைவருக்கும் பிரமாதமான நல்ல பலன்களை வழங்கும்.

  இவ்வாறு பிரிக்கப்பட்ட இந்த மனைகளில் இந்திர பலமும், குபேர பலமும் உண்டாகி அந்த இடத்தில் வாழும் அனைவரும் செல்வச் செழிப்போடு வாழுவதும் மட்டுமின்றி அழகு பொருந்திய நல்ல உடல் நிலையும் அடுத்தவர்கள் பொறாமை கொள்ளுமளவுக்கு சுகபோக சவுகர்யங்களையும் அடைவார்கள்.

  சில இடங்களில் இந்த மாதிரியான வடக்கு பார்த்த மனையை கிழக்கு பாகத்தில் சாலை அமைப்பதற்குப்பதிலாக மனையின் மேற்கு பாகத்தில் சாலை அமைத்து இந்த சாலைக்குச் செல்ல வடமேற்கு மூலையில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும்படி அமைத்துக் கொண்டு உள்ளே பிரிக்கப்படும் மனைகளை மேற்கு பார்த்த மனைகளாக அமைத்துக் கொள்கிறார்கள்.

  இதுவும் ஒரு வகையில் சரி என்றாலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதாவது கிழக்குப்பக்கம் சாலை அமைத்து உள்ளே கிழக்கு நோக்கிப் பிரிபடும் மனைகளாக அமைத்துக் கொண்டால் அந்த மனைகளில் பிரிப்பதற்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களை விடவும் ஒருபடி மேலான வாழ்வு அமையும்.

  இதே ஒரு வேளை மேற்குப் பக்கம் சாலை அமைத்துக் கொண்டு உள்ளே பிரிபடும் மனைகளை மேற்கு நோக்கிய மனைகளாகப் பிரித்துக் கொண்டால் அந்த மனையில் வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வைவிட பிரிக்கப்பட்ட பின் இந்தச் சொத்துக்களை அனுபவிக்கும் வாரிசுகள் சற்று தாழ்ந்த நிலைக்குச் செல்வதைக் காணமுடியும்.

  எனவே வடக்குப் பார்த்த பூர்வீகச் சொத்தை கிழக்கு நோக்கிய பாகங்களாகப் பிரித்துக் கொண்டால் உரிமையாளர்களுக்கு அனேக நன்மைகள் உண்டாகும் இதுவே வாஸ்துவின்படி நலன் செய்யும்.

  தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

  Next Story
  ×