search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    திருவொற்றியூரில் இருக்கும் தன் வீட்டை எப்படியாவது விற்று விட வேண்டும் என்று தீர்மானித்தார் அங்கம்மாள்.
    ஆனால், அந்த இடத்தில் குடி இருந்து வரும் பழைய பேப்பர் வியாபாரி காலி பண்ணாமல் சண்டித்தனம் செய்தார். இந்த நிலையில்தான் காஞ்சி சென்று பெரியவாளைத் தரிசித்து வரலாம் என்று சைதாப்பேட்டையில் இருந்து புறப்பட்டார் அங்கம்மாள்.
    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டு நடந்தே ஸ்ரீமடத்தை அடைந்தார்.

    ஆனால், அருகே செல்ல முடியாத அளவுக்குக் கூட்டம். ஸ்ரீமடத்தின் வாசலே தெரியாத அளவுக்குப் பக்தர்கள் கூட்டம் தெருவில் காணப்பட்டது.

    காரணம் என்ன தெரியுமா?
    அன்னை காஞ்சி காமாட்சி ஏதோ உற்சவத்தின் காரணமாக ஸ்ரீமடத்தின் வாசலில் அன்றைய தினம் எழுந்தருளி இருந்தாள்.
    காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் பெரும்பாலான திருவிழாக்களின்போது அம்பாள் உற்சவர் விக்கிரகம் வீதி உலாவாகப் புறப்பட்டு ஸ்ரீமடத்தை அடையும். சிறிது நேரம் அங்கேயே இருந்து விட்டு பக்தர்களுக்குத் தரிசனம் தந்து விட்டுப் புறப்ப டுவாள். இதனால்தான் அன்று ஸ்ரீமடத்தின் வாசலில் கூட்டம்.

    அன்னை காமாட்சியைத் தொலைவில் இருந்தபடியே தரிசித்தார் அங்கம்மாள். அம்பாள் அருகே நெருங்க முடியவில்லை. ‘சரி... வந்த காரியத்தைப் பார்க்கலாம்’ என்று ஸ்ரீமடத்தின் வாசலை நோக்கி நகர்ந்தார். அந்தக் கூட்டத்தில் மெள்ள மெள்ள நீந்திச் சென்றார்.
    ஸ்ரீமடத்தின் வாசலை அடைந்தபோது ஆச்சரியம். அங்கே கூட்டமே இல்லை. வந்திருந்த பக்தர்கள் அத்தனை பேரும் காமாட்சி தரிசனத்தில் வீதியில் மெய் மறந்து காணப்பட்டனர்.

    அடுத்து, இன்னொரு ஆச்சரியம்.
    ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது’ என்று சொல்வார்கள் அல்லவா?
    எந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டும் என்று அங்கம்மாள் காஞ்சிக்கு வந்தாரோ, அந்த மகான் ஸ்ரீமடத்தின் வாச லிலே ஒரு சிறிய திண்ணையில் காணப் பட்டார்.

    அங்கம்மாள் ஸ்ரீமடத்தினுள் நுழைய முற்பட்ட வேளையில், அதுவரை தான் அமர்ந்திருந்த பலகையில் இருந்து எழுந்தார் மகா பெரியவா. திண்ணையில் நின்றார். வீதியில் தரிசனம் தந்து கொண்டிருக்கும் காமாட்சியைக் கண்ணாரக் கண்டு இன்புற்றார்.
    மிகச் சரியாக அந்த வேளையில்தான் பெரியவாளை நேருக்கு நேராகப் பார்த்தார் அங்கம்மாள்.

    சொல்லப்போனால் இந்த இடத்தில் பெரியவாளையும் அங்கம்மாளையும் தவிர, வேறு எவரும் இல்லை.
    தான் வந்திருக்கிற வேளையில் இப்படி ஒரு ஆனந்தமான தரிசனம் கிடைக்கிறதே என்று பூரித்துப் போனார் அங்கம்மாள்.
    வீடு விற்கப்பட வேண்டும் என்பதை விட கணவரின் மோசமான உடல் நிலைதான் அப்போது நினைவுக்கு வந்தது அங்கம்மாளுக்கு. உடனே பெரியவாளின் திருமுகம் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணங்கினார்.

    ‘பிரார்த்தனைகளைப் பெரியவாளிடம் வார்த்தைகள் மூலமாகத் தெரிவிக்கக் கூடாது... அதாவது, சொல்லக் கூடாது. பிரார்த்தனையை மனதுக்குள் நினைத்துப் பெரியவாளை வணங்க வேண்டும்’ என்பது அங்கம்மாள் குடும்பத்தில் இருக்கிற அனைவரும் பின்பற்றி வரக் கூடிய வழக்கம். இப்படித்தான் அங்கம்மாளின் தாயாரும் மாமியாரும் பிரார்த்தித்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

    அதன்படி, ‘பெரியவா... என் கணவர் வியாதியால் ஒண்ணேகால் வருடம் படாத பாடு படுகிறார். எந்த மருத்துவராலும் அவரை குணமாக்க முடியவில்லை. நீங்கள்தான் குண மாக்க வேண்டும்’ என்கிற பிரார்த் தனையை மனதுக்குள் முன்வைத்து வணங்கினார்.
    இரண்டு நிமிடம் அங்கம்மாளையே வைத்த கண் வாங்காமல் பரிதாபமாகப் பார்த்தார் மகா பெரியவா.
    பதிலும் இல்லை. அனுக்கிரகமும் இல்லை.

    இதை அடுத்து அடுத்த பிரார்த்தனையை மனசுக்குள் நினைத்தார் அங்கம்மாள். இது என்ன பிரார்த்தனை தெரியுமா?
    ‘பெரியவா... என் கையில காசு இல்லை. ரெண்டு குழந்தைகள் காலேஜ் படிச்சிண்டிருக்கா. படிப்புச் செலவுக்கு கஷ்டமா இருக்கு. வீட்டையாவது வித்து டலாம்... பணம் வரும்... அதை வெச்சு சமாளிக்கலாம்னு பார்த்தா, வீட்டை விக்கறதுக்கு குடி இருக்கிற பழைய பேப்பர் வியாபாரி ஒத்துழைக்க மாட்டேன்கிறார். நீங்கதான் பெரியவா எப்படியாவது வித்துக் கொடுக்கணும்.’
    - அங்கம்மாள் தன் மனசுக்குள் வைத்த இந்தப் பிரார்த்தனை தனக்கே கேட்டு விட்டது போல் அடுத்த கணம் ஒரு புன்னகையுடன் பார்த்தார் பெரியவா. தன் வலக்கையை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
    மனசுக்குள் வைத்த முதல் பிரார்த்தனைக்குப் பதில் இல்லை. ஆனால், அடுத்து வைத்த பிரார்த்தனைக்குப் பெரியவா அருள் புரிந்தார்.

    ‘சரி... பெரியவா நமக்கு நல்லதைத்தான் அருளுவார்’ என்று காஞ்சியில் இருந்து சைதாப்பேட்டை திரும்பினார் அங்கம்மாள்.
    அடுத்த நாள் மாலை அந்த ஆச்சரியம் நடந்தது. மாலை ஏழு மணி. சைதாப்பேட்டையில் தன் வீட்டில் இருந்தார் அங்கம்மாள்.
    திருவொற்றியூரில் குடி இருக்கும் பழைய பேப்பர் வியாபாரி திடீரென வந்தார்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    ‘இடத்தைக் காலி பண்ண மறுக்கிற இந்த ஆசாமி அடுத்து என்ன குண்டைப் போடப் போகிறாரோ’ என்ற கவலையுடன் வாசலுக்கு வந்து ‘என்ன?’ என்பதுபோல் அவரது முகம் பார்த்தார் அங்கம்மாள்.

    ‘‘அம்மா... எனக்கு வேற ஒரு இடம் கிடைச்சிடுச்சும்மா. இதுதான் என் புது இடத்தோட விலாசம். நாளைக்கு அங்கே வந்து சாவியை வாங்கிக் குங்கம்மா. என்ன செட்டில் பண்ணணுமோ, எல்லாத் தையும் பண்ணி டறேன்’’ என்று சொல்லி, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.

    அந்தத் துண்டு காகிதத்தைக் கையில் வாங்கிக் கொண்டார்.
    இதுவரை அடாவடி செய்த வியாபாரியின் முகம், அன்பு மயமாகக் காணப்பட்டது.
    ‘இதுநாள் வரை இவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து விட்டோமே’ என்கிற குற்ற உணர்வு அந்த முகத்தில் பிரதிபலித்தது.
    அங்கம்மாளால் நம்ப முடியவில்லை. தன்னைக் கிள்ளியும் பார்த்துக் கொண்டார்.
    அதன்படி அடுத்த நாள் தன் மகனுடன் திருவொற்றியூர் சென்றார். துண்டு காகிதத்தில் குறித்துக் கொடுத்திருந்த புது முகவரியை அடைந்தார்.

    பிரமித்துப் போனார் அங்கம்மாள். இதுவரை வியாபாரி இருந்த அங்கம்மாளின் இடம் எப்படி இருந்ததோ, அச்சு அசல் அதுபோன்ற இடம். முன்பக்கம் வீடு. பின்பக்கம் காலி இடம். வடிவுடையம்மன் ஆலய திருக்குளத்துக்கு அருகே இப்படி ஒரு இடம் கிடைத்திருந்தது.
    தன்னை நம்பிப் பிரார்த்தித்த பக்தையின் வேண்டுதலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரே நாளில் பேப்பர் வியாபாரிக்குத் தானே புது இடம் பார்த்துக் கொடுத்தது போல் அத்தனை கச்சிதமாக இருந்தது. வியாபாரிக்கு சந்தோஷமான சந்தோஷம்.

    சாவியைக் கொடுத்து விட்டு செட்டில் செய்ய வேண்டியதையும் கொடுத்து முடித்தார்.
    அடுத்த நாளே அங்கம்மாளின் இடத்தை ஒருவர் வந்து பார்த்து, விலையும் பேசி முடித்து விட்டார்.
    பணமும் கைக்கு வந்தது. கணவர் ராமபிரசாத்தை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ராஜ வைத்தியம் செய்யப்பட்டது.

    ராமபிரசாத்துக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மனைவி அங்கம்மாளைப் பார்த்து, ‘‘நீ ஒண்டிக்கட்டையாக இருந்து இத்தனை வேலைகளைச் செய்கிறாயே... அந்த வீட்டையும் விற்க முடியாமல் தவிக்கிறாயே என்று மகா பெரியவாளே துணைக்கு வந்து முடித்துக் கொடுத்திருக்கிறார்’ என்று பூரிப்போடு சொன்னார் மருத்துவமனையில்.

    இதன் பின் மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.
    1986 ஜூனில் காஞ்சி ஸ்ரீமடத்தில் பெரியவா தரிசனம். அடுத்த நாளே வீடு விற்பதற்கு உண்டான வேலைகள் துவங்கியாயிற்று. 1986 செப்டம்பர் மாதம் ராமபிரசாத் இறந்தார்.

    அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி புரிகிறபோது எவரிடமும் இருந்து ஒரு டீயைக்கூட இலவசமாக வாங்கிக் குடிக்க மாட்டாராம் அங்கம்மாள். அப்படியே யாரேனும் தவிர்க்க முடியாமல் ஒரு டீ வாங்கிக் கொடுத்து விட்டால், அடுத்து வருகிற நாட்களில் அவருக்கு இரண்டு டீயாக வாங்கிக் கொடுத்து விடுவாராம். அத்தகைய நேர்மையும் பெரியவா பக்தியும்தான் அங்கம்மாளை வழிநடத்தியது என்றே சொல்லலாம்.
    Next Story
    ×