என் மலர்

  செய்திகள்

  கோவில்
  X
  கோவில்

  வீடும் வாழ்வும்: கோவில் அருகில் வீடு கட்டலாமா?- ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில் நிலத்தில் அதுவும் கோவிலுக்கு அருகில் வீடு கட்டுவதும் கோவில் நிலத்தை அபகரிப்பதும், கோவில் நிலத்தில் உழுது பிழைப்பதும் வாஸ்துபடி குற்றமாகவே கருதப்படுகிறது.


  நீங்கள் கட்டியுள்ள வீட்டில் வடமேற்கு மூலையில் படுக்கை அறை அமைத்துக் கொள்வீர்களானால் இது சிறப்பைத் தரும்.

  குறிப்பாக வீட்டின் தென் மேற்கும் வடமேற்கும் படுக்கை அறை அமைத்துக் கொள்ள சிறந்த இடங்களே என்றாலும், முதலிடம் பெறுவது தென்மேற்கு மூலைதான். எனவே எப்படியாவது தென் மேற்கு மூலையை படுக்கை அறைக்குப் பயன்படுத்த வேண்டும்.

  சிலர்தென் மேற்கில் மேல் மாடிக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைப்பதும் நன்மை தானே என்று சொல்வதுண்டு. உண்மைதான். ஆனால், தென்மேற்கில் படிக்கட்டு அமைத்தாலும், தென் மேற்கில் படுக்கை அறை வரவேண்டும்.

  இதுபோல ஒரு வீட்டில் இரண்டாவது முக்கியமான இடம் எனில் அது வடமேற்கு மூலையில் படுக்கை அறை அமைப்பதுதான்.

  ஆனால் மேற்கு பார்த்த தலைவாசல் கொண்ட வீட்டிற்கு வடமேற்கில் அல்லவா தலைவாசல் வரும். அது தானே அந்த இடத்திற்கு உச்சஸ்தானம், பின்பு எப்படி வடமேற்கில் படுக்கை அறை அமைக்க முடியும் எனத் தோன்றும்.

  முன் சொன்னது போலவே, வடமேற்கில் தலைவாசல் வைத்தாலும், வாசலுக்கு தென்திசையில் படுக்கை அறை இருப்பது விசே‌ஷமே.

  வடமேற்குப் படுக்கை அறை வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நன்மையே தரும்.

  சரி இப்படி வடமேற்கில் அமையும் படுக்கை அறைக்கு அந்த அறையின் தெற்குப் பக்கத்தில் கிழக்கு சார்ந்தும், கிழக்குப் பக்கத்தில் வடக்கு சார்ந்தும் வாசல் வைத்துக் கொள்ள வேண்டும்.

  உள் அறைகளில் வரும் வாசல்களைப் பொறுத்தளவு அளவுகளில் கட்டாயமில்லை. தலைவாசலுக்கு மட்டும்தான் அகல, உயர அளவுகளில் விதிகள் உண்டு.

  வடமேற்கு மூலையில் உள்ள இந்த படுக்கை அறையில் ஜன்னல் அமைக்கும் போது வடக்குச் சுவற்றின் கிழக்கு ஒரத்திலும் அல்லது வடக்கு சுவரின் மையத்திலும், மேற்குச் சுவரின் வடக்கு ஒரத்திலும் ஜன்னல்கள் வைக்கலாம். ஜன்னல்களின் அளவுகளிலும் விதிகள் இல்லை.

  மேலும் இந்த வடமேற்கு மூலையின் படுக்கை அறையில் கழிவறையை அறையின் வடக்குச் சுவரை ஒட்டி, கிழக்கு மேற்காக அமைத்துக் கொள்ளலாம். கழிவறையின் உள்ளே வடமேற்கு மூலையில் தெற்கு நோக்கி கழிவு உபரகரணத்தைப் பொருத்த வேண்டும். குளிக்கும் இடமாக கழிவறையின் உள்ளே வடகிழக்கு மூலையைப் பயன்படுத்தலாம். முகம் கழுவ வாஷ்பேசின் வைக்க தென்மேற்கு மூலையைப் பயன்படுத்தலாம்.

  கழிவறையின் வாசல் கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் அமையலாம். முடிந்த மட்டும் வடமேற்கு மூலையின் கழிவறைத் தளத்தை பள்ளம் செய்யாமல் வேண்டுமெனில் சற்று உயர்த்தியும் கட்டலாம்.

  வடமேற்கு மூலையில் அமைந்துள்ள இந்த படுக்கை அறையில் தெற்குச்சுவர் சார்ந்து, மேற்கு நோக்கியும், அறையின் மையப் பகுதியில் தெற்கு நோக்கியும் கட்டிப் போடலாம்.

  அறையின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் திறந்து மூடும்படி கபோடுகள் வைத்துக் கொள்ளலாம்.

  ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

  முக்கியமான விலை உயர்ந்த மற்றும் முக்கியமான பத்திரங்கள் போன்றவற்றை இந்த கபோடுகளில் பத்திரப்படுத்தலாம்.

  இந்த அறையின் கிழக்குச்சுவர் சார்ந்து வடக்கு, தெற்காக கப்போர்டுகள் மற்றும் துணிகள் வைக்கும் பீரோக்கள் வைக்கலாம். ஆனால் அந்த கிழக்குச்சுவரில் பரண்கள் அமைக்கக் கூடாது.

  இந்த வடமேற்கு அறையின் வடகிழக்கு மூலையில் டிரஸ்சிங் அறையாகப் பயன்படுத்தலாம். கண்ணாடியைக் கிழக்குச் சுவற்றில் மாட்டிக் கொள்ளலாம். சிலர் வடமேற்கு அறையின் குளியல் அறை உள்ளே பரண்கள் அமைப்பார்கள். இது பெருந் தவறு.

  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் குறைந்த பட்சமாக நீங்கள் வாங்கும் வீட்டின் உள்ளே வடமேற்கில் படுக்கை அறை உள்ளதா என்று பார்த்துக் கொள்வது நல்லது. தென்மேற்கு மூலையிலும் வடமேற்கு மூலையிலும் உங்கள் வீட்டில் படுக்கை அறை அமைந்து அதன் உள்ளே நான் முன்னே சொன்னபடி உள் அமைப்புகளை வைத்துக் கொண்டால் அநேகமாக 50 சதவீதம் வாஸ்து தோ‌ஷம் கழிந்து போகும்.

  சிலர் வடமேற்கு மூலையில் படுக்கை அறை அமைத்துக் கொண்டு, அந்த அறையின் உள்ளே தென்பகுதியில் கிழக்கு மேற்காக கழிவறை அமைப்பார்கள் இது தவறு.

  இதுபோல மேற்கு சுவர் ஒரத்தில் தெற்கு வடக்காக கழிவறை அமைப்பார்கள் இதுவும் தவறுதான்.

  சரி உங்கள் வீட்டின் வடக்கே சரியாக 360 டிகிரியில் படுக்கை அறை அமைந்தால் எப்படி இருக்கும்?

  அதாவது நேர் வடக்கு என்பது குபேரனுக்குச் சொந்தமான இடம் என்பதால் இது ஒரளவுக்கு நன்மைதான். சில வீடுகளில் குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏதோ காரணத்தால் இந்த 360டிகிரி எனும் வடக்கு வீட்டுக்குள் இல்லாமலே போய்விடும். எப்போதுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒரு போதும் சதுரமாகவோ, செவ்வகமாகவோ இராது.

  அதன் அடிப்படையில் இப்படி வடக்கு என்பது வீட்டுக்குள் வராமல் போவது வாஸ்து தோ‌ஷத்தைத் தரும்.

  சிலர் உழைத்து உழைத்து வீணாகப் போவதும், பெரும் தொழில் அதிபர்கள் கூட கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆவதும் இப்படியான குறைகளால் தான்.

  எனவே நீங்கள் வீடு கட்டும் போது வடக்குத் திசைக்கு அதிக முக்கியத்துவம்தர வேண்டியது கட்டாய மாகிறது.

  இப்படியான வடக்குத் திசையில் உங்கள் வீட்டில் படுக்கை அறை அமையுமானால், முடிந்த மட்டும் அந்த அறையின் உள்ளே கழிவறை அமைத்துக்கொள்ள வேண்டாம். கட்டாயம் வேண்டுமெனில் குளிப்பதற்கு மட்டும் அறை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கும் குளியல் அறையும் வடக்கிலோ, தெற்கிலோ அல்லாமல் மேற்குப் பக்கம் மட்டும் அமைத்துக் கொள்ளலாம். அதாவது மேற்குச்சுவர் ஒட்டி தெற்கு வடக்காக அமைக்க வேண்டும்.

  அதுபோலவே இந்த வடக்குத்திசையின் படுக்கை அறை உள்ளே எந்தச் சுவரிலும் பரன்கள் அமைக்கக்கூடாது. முடிந்தால் மரத்தாலான தற்காலிக கப்போர்டுகள் வைத்துக் கொள்ளலாம்.

  இப்படியான தற்காலிகக் கப்போர்டுகளையும் தெற்கு மற்றும் மேற்குச்சுவர் ஒரத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

  இந்த அறையில் கிழக்கு நோக்கி அறையின் மையப்பாகத்தில் கட்டில் போட்டு கிழக்கில் தலை வைத்துத் தூங்கலாம்.

  குறிப்பாக ஒரு வீட்டில் உள்ள அறைகளில் கிழக்கு நோக்கித் தலைவைத்து படுப்பது இந்த வடக்குப்பாகத்தில் அமைந்த படுக்கை அறையில் மட்டுமே.

  வடக்கு பாகத்தில் அமைந்துள்ள இந்த படுக்கை அறை குறிப்பாக இளம் பிள்ளைகள் அமர்ந்து படிப்பதற்கு மிகப் பொருத்தமான இடம். அதிலும் வடக்குச் சுவர் சார்ந்து டேபிள் போட்டு, வடக்கு நோக்கி அமர்ந்து படித்தார்களாயின் குழந்தைகள் கல்வியில், அறிவாற்றலில், ஒழுக்கத்தில், பழக்க வழக்கங்களில் மிக அற்புதமான பலன் பெறுவார்கள்.

  இந்த அறை நூலகமாக பயன்படுத்த இசை சார்ந்த பயிற்சி பெறுவதற்கு கலைகள் சார்ந்த அனைத்துப் பயிற்சிகளுக்கும் மிகச் சிறப்பாக அமையும்.

  குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு இது மிகப் பொருத்தமான இடம். வீர, விவேகத்தோடு பிள்ளைகள் வளருவார்கள்.

  பழைய செட்டிநாட்டு வீடுகளில் இந்த வடக்குப் பாகத்தில் அமைந்துள்ள இந்த அறைகளில்தான் பணப்பெட்டகம் வைப்பதும், அதையே பூஜை அறையாக பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.

  கிராமப்புற விவசாயக் குடும்பங்களில் வீட்டின் இந்த மையப் பகுதியில் தான் விதை நெல் போன்ற அடுத்த மகசூலுக்கான விதைகளைச் சேமிப்பார்கள்.

  குறிப்பாக வீட்டுக்கு வெளியே கூட இந்த வடக்கு மையபாகத்தில் வாழைமரம் நட்டு வைப்பார்கள்.

  ஆனால் இன்றைய தலைமுறையினர் இதில் நாட்டம் கொள்வதுமில்லை. தெரிவதுமில்லை. முற்போக்கு என்ற கண்ணோட்டத்தில் நம் பாரம்பரிய வி‌ஷயங்களை நாம் மறந்து கொண்டு இருக்கிறோம். இழந்து கொண்டு வருகிறோம்.

  இனி கோவிலுக்குப் பக்கத்தில் வீடு, நிலம் அமையலாமா? அதேபோல் கோவில் நிலத்தில் குடி இருக்கலாமா? என்ற செய்திகளை இங்கே காணலாம்.

  அதாவது கோவிலுக்கு கிழக்குப் பக்கத்தில் வீடு அமையுமானால் அது சிறப்பில்லை. பொதுவாக கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருந்தால் வருவோர், போவோர் ஜன சந்தடியால் தொல்லைகள் உண்டாகும் என்று நினைத்து இது சொல்லப்படவில்லை. வாஸ்து சாஸ்திரப்படி கோவிலுக்குப் பக்கத்தில் குறிப்பாக கோவிலுக்கு கிழக்குப்பக்கத்தில் குடியிருந்தால் அங்கு வாழ்வோரின் கடைசிக்காலம் மிகக் கஷ்டமாக கழியும் என்றும் அந்த வீட்டுப் பிள்ளைகளிடம் ஒற்றுமை குறைந்து ஆளுக்கு ஒருபக்கம் போவார்கள் என்றும் ஊர்ப்பகை, பொல்லாப்பு, அவப்பெயர் என்று அந்த வீட்டை ஆண்டவருக்கு ஏராளமான துக்கங்கள் வரும் என்றும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

  மேலும் தாரபங்கம், புத்திர தோ‌ஷம், புத்திரசோகம் உண்டாகும் என்பார்கள். எனவே கோவிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் அதுவும் கோவில் நிலத்தில் குடியிருந்து ஒரு வேளை அந்த கோவிலுக்கு ராஜேகோபுரம் இருந்து, மாலை நேர வெயிலில் அந்த ராஜகோபுரத்தின் நிழலானது இந்த வீட்டின் மேலே விழுமாயின் முன்னே சொன்ன அனைத்தும் நடந்தேறும்.

  சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டுவதாயின் கூட கோவிலுக்கு கிழக்குப் பக்கத்தில் கோபுரத்தின் நிழல் வீட்டின் மேல் விழும்படி வீடு கட்டுவதைத் தவிர்க்கலாம். இதுபோல கோவில் உள்ள இடத்தில் கோவிலின் மேற்கு பக்கத்திலும் வீடு கட்டிக் குடியேறுவது சிறப்பில்லை.

  மேற்குத் திசையில் ஒரு வேளை அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி அந்த அடுக்குமாடிக் கட்டிடமானது கோவில் ராஜகோபுரத்தை விட மிக அதிக உயரமாக கட்டப்படுமாயின் ஒரளவு தொந்தரவுகள் இருக்காது.

  கோவில் கோபுரத்தைவிட குறைவான உயரத்தில் வீடு அமைந்து அந்த வீட்டை முழுமையாக காலைச்சூரியன் கோபுர நிழலானது வீட்டின் மேல் விழுமாயின் இதுவும் வாஸ்து தோ‌ஷமே.

  இந்த வீடானது கோவில் நிலத்தில் கட்டப்பட்டு இருந்தால் முழு தோ‌ஷத்தையும் அந்த வீட்டார் அனுபவிப்பார்கள்.

  கூடவே கோவில் நிலத்தை அபகரிப்பது அதில் வீடு, தொழில் நடத்துவது, ஏன் விவசாயம் செய்வது எதுவுமே மிகச் சிறப்பைத் தராது.

  பொதுவாக பிள்ளை இல்லாதவர்கள் மேலும் பிள்ளை இல்லாது இருந்து தனக்கு முன்னே கணவனை இழந்து விட்டவர்களால் எழுதி வைக்கப்பட்ட சொத்துகளே கோவில் நிலங்களாகும்.

  இப்படி அந்த சொத்து அதனுடைய உரிமையாளர்களுக்கே பயன்படாமல் போகிறது என்றால் நிச்சயம் வாஸ்துவின்படி அந்த சொத்தில் தோ‌ஷம் உள்ளது என்பதே பொருள்.

  அப்படிப்பட்ட சொத்தை பின்வரும் காலங்களில் யார் எடுத்துக் கொண்டாலும் அதில் தொல்லைகளே மிஞ்சும்.

  எனக்கு தெரிய கோவில் நிலங்களை உழுது பிழைத்தவர்கள் கூட பெரிய மேன்மை அடைந்த செய்திகள் இல்லை.

  எனவே தான் அந்த சொத்தை தன் சொந்தங்களே பெற்றுக்கொள்ளாமல் கோவில்களுக்கு எழுதி வைத்தார்கள். எனவே தான் “கோவில் சொத்து குல நாசம்” என்று சொல்லப்பட்டது.

  ஆனால் இன்று கதை வேறு, இதுபோலத்தான் கோவிலுக்குப் பக்கத்தில் நீங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தில் நிலம் வாங்கி வீடு கட்டுவதாயின் கூட கவனமாக செயல்பட வேண்டும்.

  கோவிலுக்கு நேர் எதிர் திசையான 180 டிகிரி கோணத்திலும் அதேபோல 360 டிகிரி கோணமான தெற்கிலும், வடக்கிலும் உங்கள் சொந்த இடங்களில் வீடு கட்டிக் குடியேறலாம்.

  இதையெல்லாம் காரணமாக வைத்து தான் அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் கோயிலை ஊருக்கு வெளியே கட்டினார்கள். இன்று அதுவும் தலைகீழாகப் போனது.

  எப்படியாயினும், கோவில் நிலத்தில் அதுவும் கோவிலுக்கு அருகில் வீடு கட்டுவதும் கோவில் நிலத்தை அபகரிப்பதும், கோவில் நிலத்தில் உழுது பிழைப்பதும் வாஸ்துபடி குற்றமாகவே கருதப்படுகிறது.

  தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

  Next Story
  ×