search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எத்திராஜ் சுவாமிகள்
    X
    எத்திராஜ் சுவாமிகள்

    சென்னை சித்தர்கள்: எத்திராஜ் சுவாமிகள் - எருக்கஞ்சேரி

    பொதுவாக சென்னையில் உள்ள பழமையான ஜீவசமாதிகளில் வீற்றிருக்கும் சித்தர்களை “தாத்தா” என்று அழைக்கிறார்கள்.
    சித்தர்களை கண்கண்ட தெய்வமாகவே நாம் வழிபடுகிறோம். பெரும்பாலான ஜீவசமாதி களில் சித்தர்களின் அருள்அலைகள் மிகப்பெரிய அளவில் இருப்பதை இப்போதும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்கு காரணம் அந்த சித்தர்கள் பெற்றுள்ள அளவு கடந்த ஆற்றலாகும்.

    சமீப காலமாக சித்தர்களை உறவு முறை சொல்லி அழைப்பது அதிகரித்து விட்டது. தங்கள் பகுதிகளில் உள்ள ஜீவ சமாதிகளில் அருள்பாலிக்கும் சித்தர்களை ஏதாவது ஒரு உறவு சொல்லி அழைப்பதை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காண முடிகிறது.

    பொதுவாக சென்னையில் உள்ள பழமையான ஜீவசமாதிகளில் வீற்றிருக்கும் சித்தர்களை “தாத்தா” என்று அழைக்கிறார்கள். ‘தாத்தா’ வந்தார். ‘தாத்தா’ ஆசி வழங்கினார். ‘தாத்தா’ சிரித்தார். ‘தாத்தா’ கனவில் வந்தார் என்றெல்லாம் பேசிக் கொள்வது நடைமுறையில் உள்ளது.

    சித்தர்கள் எந்த உறவு வலைக்குள்ளும் தங்களை பிணைத்துக் கொள்வதே இல்லை. பந்தபாசம் அனைத்தையும் முற்றிலும் துறந்தவர்கள், விரட்டியவர்கள் சித்தர்கள். என்றாலும் சாமானிய மக்களின் வறுமை, எளிமை, அறியாமை, தன்னிலை உணராமை ஆகியவற்றை கண்டு சித்தர்கள் மிகுந்த இரக்கம் கொள்வார்கள். கேட்டாலும், கேட்கா விட்டாலும் ஏழைகளுக்கு தாமாகவே சித்தர்கள் உதவி செய்வது உண்டு.

    அதனால்தானே என்னவோ ஏழை-எளிய மக்கள் ஜீவ சமாதிகளில் வாழும் சித்தர்களை உறவு முறை சொல்லி அழைக்கிறார்கள். சில இடங்களில் ‘அப்பா’ என்பார்கள். சில இடங்களில் ‘தாத்தா’ என்பார்கள். அப்படி ஒரு ‘தாத்தா’ சித்தரைத்தான் பார்க்கப்போகிறோம்.

    அவரது பெயர் ஸ்ரீ மத் வித்வமணி வேதாந்தம் புதுவை நா.எத்திராஜ் சுவாமிகள். இந்த சித்தரின் ஜீவ சமாதி எருக்கஞ்சேரி, டாக்டர் அம்பேத்கர் சாலையில் காமராஜர் திருமண மண்டபத்தின் அருகில் அமைந்துள்ளது.

    வைணவ வழிபாடுகளில் இருப்பவர்கள் சித்தப்புருஷர்களாக மாறுவது என்பது மிக மிக அரிதான ஒன்றாகும். தமிழகத்தில் வைணவ சித்தர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தகையவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஆகும். ஆனால் இவர் பெயருடன் புதுவை இணைந்துள்ளது. புதுவையில் இவர் நீண்ட நாட்களாக இருந்துள்ளார்.  கொத்த யிண்டி கோ.துளசி சுவாமிகளின் அந்தரங்க சிஷ்யர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
    சாது நாராயண தேசிகரின் மாணவர் களில் ஒருவர் ஆவார். ஸ்ரீ சடகோபாழ்வார் வேதாந்த சபையின் ஆசிரியராகவும் இவர் சேவை ஆற்றினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த இவர் ஆந்திராவில் இருந்து தமிழ கத்துக்கு வந்த ஆண்டுகள் பற்றிய குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    அதுபோல புதுச்சேரிக்கு இவர் சென்ற ஆண்டுகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்க வில்லை. என்றாலும் செவிவழி செய்தியாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நிறைய உலா வருகின்றன.

    கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் புதுவையில் இருந்து தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். சென்னையில் முதலில் கொண்டித்தோப்பு பகுதியில் குடில் அமைத்து வசித்து வந்தார். அந்த சமயத் தில் அவர் கனவில் பாம்பு ஒன்று வந்து வழிகாட்டியதாம்.

    அதன் பேரில் எத்திராஜ் சுவாமிகள் தனது இருப்பிடத்தை வடசென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதிக்கு மாற்றிக் கொண்டார். அங்கு தென்னந்தோப்புகள் அடங்கிய பகுதியில் மடாலயம் அமைத்து ஆன்மீக சேவையாற்றினார்.
    குறிப்பாக சென்னையில் உள்ள பெருமாள் பக்தர்களை ஒன்றிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வந்தார். இதன் காரணமாக வடசென்னை பகுதியில் அவரது தொண்டர்கள் அதிகளவில் பெருகினார்கள். அவர்கள் எத்திராஜ் சுவாமிகளின் பெயரில் ஆங்காங்கே சபைகளை உருவாக்கி நடத்தி வந்தனர்.

    மாத்தூர், மணலி, மூலகொத்தளம் அரிநாராயணபுரம், மடுமாநகர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, விளங்காடுபாக்கம் என்று பல பகுதிகளிலும் எத்திராஜ் சுவாமிகளின் சீடர்கள் மிக சிறப்பாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் 1930-களில் ஒரு நாள் எத்திராஜ் சுவாமிகள் தனது சீடர்களை அழைத்து தான் முக்தி அடைய போகும் தகவலை வெளியிட்டார்.

    ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று  தனது உடலில் இருந்து ஆத்மா பிரிந்து விடும் என்றும் தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது ஆத்மார்த்த ஆன்மீக தொண்டர்கள் அனைவரும் கதறி அழுதனர். ஆனால் தனக்கு பிறகு தனது ஜீவசமாதி எப்படி அமைய வேண்டும் என்பதை  எத்திராஜ் சுவாமிகள் குறிப்பால் உணர்த்தி இருந்தார்.

    அவர் சொன்னது போலவே 1938-ம் ஆண்டு  ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திர தினத்தன்று அவர் தனது ஆத்மாவை பிரித்துக் கொண்டார். அவருக்கு எங்கு ஜீவ சமாதி அமைப்பது என்பதில் இரு தரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டது. ஒரு தரப்பினர் சொன்னதை மற்றொரு தரப்பினர் ஏற்கவில்லை.

    சீரடி சாய்பாபா தனது உயிரை பிரித்துக் கொண்டபோதும் இதுபோன்றுதான் இரு தரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்தனர். அதே போன்று எத்திராஜ் சுவாமிகளின் சீடர் களிடமும் ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப் பட்டது.

    அந்த சமயத்தில் பெரும்பாலானவர்கள் எத்திராஜ் சுவாமிகளின் ஜீவ சமாதியை எருக்கஞ்சேரி பகுதியில் அமைத்தால் நல்லது என்று வாக்களித்தனர். அதன்பேரில் எருக்கஞ்சேரியில் ஒரு இடத்தை தனி நபர் ஒருவர் தானமாக அளிக்க முன் வந்தார். அந்த இடத்தில் எத்திராஜ் சுவாமிகள் ஜீவ சமாதி அமைக்கப்பட்டது.

    சிறிய குடிலில் எத்திராஜ் சுவாமிகளின் படம் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. ஆண்டு தோறும் அவரது சீடர்கள், பக்தர்கள் குரு பூஜை நடத்தி வந்தனர். முதலில் ஆலயப் பொறுப்பை முருகஹரிதாசர் ஏற்று சிறப்பாக செய்து வந்தார். அவரைத் தொடர்ந்து ஜெயராம தாசர் ஆலயப் பூஜைகளை கவனித்துக் கொண்டார்.

    தற்போது காந்தரூப தாசர்  தினசரி பூஜைகள் செய்து வருகிறார். இந்த ஜீவ சமாதியை ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கே.சீனிவாசன், எம்.கே.ராஜேந்திரன், எம்.கே.கோவர்தனன் ஆகியோர் ஒருங் கிணைந்து தற்போது பராமரித்து வருகிறார்கள். இவர்கள் சிறு வயதாக இருந்தபோது எத்திராஜ் சுவாமிகளின் ஜீவ சமாதி சாதாரண குடிலில்தான் இருந்தது.

    ஒரு தடவை சீனிவாசன் ரிசர்வ் வங்கியில் மேல் அதிகாரி யாக பணியாற்றி வந்த ஆன்மீக சிந்தனையாளர் குருஜி சுந்தருடன் சித்தர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது எருக்கஞ்சேரியில் உள்ள எத்திராஜ் சுவாமிகள் ஜீவ சமாதி மாடலயம் பற்றி தெரிவித்தார். இதையடுத்து எருக்கஞ்சேரிக்கு சென்று அந்த ஜீவ சமாதியை குருஜி சுந்தர் பார்வையிட்டார்.

    அந்த சமயத்தில் குடிலில் இருந்த ஜீவ சமாதியை ஆலயமாக்க திருப்பணிக்குழுவினர் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து  எத்திராஜ் சுவாமிகளுக்கு சிலை அமைத்து கொடுக்க குருஜி சுந்தர் முன்வந்தார். அதன்படி எத்திராஜ் சுவாமிகளின் பிரமாண்ட சிலை வடிவமைக்கப்பட்டது.

    பின்னர் அந்த சிலை ஜீவ சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது இந்த ஜீவசமாதியில் தினமும் காலையில் மட்டும் பூஜை நடத்தப்படுகிறது. மூல நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. எத்திராஜ் சுவாமிகளை வழிபட சென்னையில் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வருகிறார்கள். ஒருதடவை ஒரு ஆங்கிலோ இந்திய பெண்மணி இந்த ஜீவ சமாதிக்கு வந்து வழிபட்டு தியானம் செய்து விட்டு சென்றார்.

    பல்வேறு தரப்பினரின் உதவியுடன் இந்த ஜீவ சமாதி கம்பீரமாக எழுந்துள்ளது. வருகிற திங்கட்கிழமை (8-ந்தேதி) எத்திராஜ் சுவாமி களின் 83-ம் ஆண்டு திருமூலம் திருநட்சத்திர திருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் எத்திராஜ் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

    காலை 10 மணிக்கு சுவாமிகளுக்கு தீப தூப ஆராதனைகள் காட்டி தீர்த்த பிரசாதம் வினியோகம் செய்யப்படும். மதியம் 1 மணிக்கு அன்னதானம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி ஆலயத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான சீனிவாசன் கூறியதாவது:-
    எத்திராஜ் சுவாமிகள் செய்துள்ள அற்புதங்கள் ஏராளம். அவர் பற்றி முழுமையாக எங்களுக்கு தெரியாது. ஆனால் நாங்கள் எல்லோரும் அவரை ‘தாத்தா’ என்றுதான் அழைக்கிறோம். எனது வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை ‘தாத்தா’ நிகழ்த்தி இருக்கிறார்.

    சென்னையில் ரிசர்வ் வங்கியின் கால்பந்து போட்டியை பார்க்க முடியுமா? என்று ஏங்கிய எனக்கு அந்த வங்கியின் கால்பந்து அணி பயிற்சியாளராக உயரும் அளவுக்கு என்னை வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றது ‘தாத்தா’தான். எருக்கஞ்சேரியில் இந்த பகுதியில் ஒரு நேரத்தில் நிறைய பாம்புகள் நடமாட்டம் உண்டு.

    ‘தாத்தா’வின் ஜீவ சமாதி இடத்தில் நிறைய பாம்புகள் ஓடியபடி இருக்கும். ஒருநாள் நான் தெரியாமல் ஒரு பாம்பை அடித்துக் கொன்று விட்டேன். அந்த சமயத்தில் எனது சகோதரிக்கு அருள் வந்தது. அவரது உடலில் வந்த எத்திராஜ் சுவாமிகள் என் பக்தனை அடித்துக் கொன்று விட்டாயே என்று ஆக்ரோஷமாக பேசினார்.

    அதன்பிறகுதான் எத்திராஜ் சுவாமிகளின் மகிமையை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். நான் தெரிந்து செய்யவில்லை. தெரியாமல் செய்து விட்டேன் என்று மனப்பூர்வமாக சுவாமி களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அன்று முதல் நான் என்னையே சுவாமிகளிடம் ஒப்படைத்து விட்டேன். அன்று தொடங்கி இன்று வரை நான் அவரை ‘தாத்தா’ என்றுசொல்லி தான் வழிபட்டு வருகிறேன்.

    அவரை நினைத்துக் கொண்டால் போதும் வாழ்க்கையே மாற்றி விடுவார். எனக்கு நிறைய சோதனைகள் வைத்தார். இப்போது கூட சில விஷயங்களில் நடக்கும் சம்பவங்கள் அவர் செய்யும் சோதனையாகவே நான் கருதுகிறேன். நான் யாரிடமும் எந்த பிரதிபலனும் பார்ப்பதில்லை.

    சர்வதேச உரிமைகள் கழகத்தின் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளராக இருக்கும் நான் ‘தாத்தா’வின் அருளால்தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடிகிறது. சில சாமியார்கள் திடீர் திடீரென எனக்கு அறிமுகம் ஆவார்கள். அவர்களுக்கு தேவையான  உதவிகளை ‘தாத்தா’உத்தரவின் அடிப்படையில் செய்து கொடுக்கிறேன்.

    மூல நட்சத்திர நாளில் அவரது அருள் ஆற்றல் அதிகமாக இருக்கும். அன்றைய தினம் வழிபட்டால் நினைத்தது நடக்கும். அவர் அருகில் அமர்ந்து தியானம் செய்வதற்கு உரிய வசதி இங்குள்ள ஜீவ சமாதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
    Next Story
    ×