search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருபகவான்
    X
    குருபகவான்

    குருபெயர்ச்சி பொதுபலன்கள்- ஜோதிடர் ஐ.ஆனந்தி

    நவகிரகங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. நவகிரகங்களின் முழுச் சுபரான குருவிற்கு அதீத சக்தி உண்டு.குரு தான் நின்ற இடத்தை விட பார்த்த இடத்தை புனிதப் படுத்துவார். குரு பார்த்த இடம் கோடி நன்மை பெறும். தன் பார்வை பலத்தால் அனைத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி படைத்த ஒரே ராஜகிரகம் குருபகவான் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை.


    நவகிரகங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. நவகிரகங்களின் முழுச் சுபரான குருவிற்கு அதீத சக்தி உண்டு.குரு தான் நின்ற இடத்தை விட பார்த்த இடத்தை புனிதப் படுத்துவார். குரு பார்த்த இடம் கோடி நன்மை பெறும். தன் பார்வை பலத்தால் அனைத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி படைத்த ஒரே ராஜகிரகம் குருபகவான் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை.

    ஒரு ஜாதகத்தில் எத்தனை தோ‌ஷங்கள் இருந்தாலும் குரு பார்வை இருந்தால் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது மட்டுமல்ல குருபகவான் மட்டுமே திருமணம், குழந்தை,பணம்,தொழில், உத்தியோக உயர்வு, வீடு, வாகன யோகம் என பாக்கியமான அனைத்து வி‌ஷயங்களையும் விருத்தியாக்கும் சக்தி படைத்தவர் என்பதால் தான் மக்களுக்கு குருப்பெயர்ச்சியின் மேல் அதீத ஈடுபாடு உள்ளது.

    இத்தகைய சிறப்பு மிகுந்த குருபகவான் கோட்சாரத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்கிறார். ஸ்ரீ பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4-ம் நாள் சனிக்கிழமை 20-11-2021 அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13-11-2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடை பெறும். ஒரு ராசியில் தோராயமாக ஓராண்டு காலம் சஞ்சரிக்கும் குருபகவான் மகரம் , கும்பம் என்ற இரண்டு ராசிகளிலும் வக்ரம், அதிசாரம் என மாறி மாறி கடந்த ஒரு வருடமாக சஞ்சாரம் செய்தார்.

    தற்போது கும்பத்தில் 5 மாதங்கள் மட்டுமே சஞ்சரிக்கப் போகிறார். மேலும் இந்த காலகட்டத்தில் சனி பகவான் மகரத்திலும், ராகு பகவான் ரி‌ஷபத்திலும் கேது பகவான் விருச்சிகத்திலும் உலாவும் கிரக அமைப்பைப் பொறுத்து இந்த குருப்பெயர்ச்சி பலன்களின் ஏற்ற இறக்கம் இருக்கும்.

    கும்பம் கால புரு‌ஷரின் பதினொன்றாமிடம், பாதக ஸ்தானம். குருபகவான் கால புரு‌ஷர் ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் அதிபதி. கால புரு‌ஷர் ஒன்பதாம் அதிபதி குரு லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் அயல்நாட்டு வியாபாரம், வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.பெரும்பான்மையான மக்கள் பகல் வேலையை விட இரவு வேலை செய்து பிழைக்கும் நிலை உருவாகும். உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். காசு படைத்தவர்களுக்கு மட்டுமே கடவுள் என்ற நிலை உருவாகும். தர்மம் பணத்திற்கு விலை போகும்.

    ஆன்மீகம் என்ற போர்வையில் பணம் சம்பாதிக்கும் மக்கள் அதிகரிப்பார்கள். மதப்பற்று அதிகரிக்கும். புதிய மதவாத கட்சிகள், அமைப்புகள் மற்றும் சேவை நிறுவனங்கள், தொண்டாற்றும் நிறுவனங்கள் உருவாகும். மதம் தொடர்பான கட்சிகள் மற்றும் அமைப்புகளால் சர்ச்சைகள் தோன்றும். சில மதத் தலைவர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் ஆயுள் ஆரோக்கியத்தில் பாதிக்கப்படுவார்கள். பிரிந்த, உடைந்த கட்சிகள் மீண்டும் இணையலாம். சில அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறுவார்கள்.

    20-11-2021 முதல் 1-1-2022 வரை குருபகவான் கால புரு‌ஷர் அஷ்டமாதிபதி செவ்வாயின் சாரத்தில் பாதக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நாட்டில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு, உற்பத்தி, விற்பனை மிகைப்படுத்தலாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழில், விறு விறுப்பாக இருக்கும். காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் கோட்சார செவ்வாயின் பார்வை சனிக்கும், சனியின் பார்வை செவ்வாய்க்கும் இருப்பதால் மழை அதிகமாகப் பொழியும். விவசாயிகள் பயிரிடும் பொருட்களுக்கு ஏற்ப வருமானமும் இழப்பும் இருக்கும். கோட்சார ரீதியான சனி, செவ்வாய் சம்பந்தம் விபத்துகள், கொடூர நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    மேலும் தற்போது துலாமில் நிற்கும் கோட்சார செவ்வாயின் 8-ம் பார்வை ராகுவின் மேல்பதியும். அடுத்து விருச்சிகத்தில் கேதுவுடன் இணைந்து ராகுவை பார்க்கும் காலமான 15-1-2022 வரை கவனத்துடன் செயல்பட வேண்டும். பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனாவின் மூன்றாவது அலைத் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்வது அவசியம்.

    1-1-2022 முதல் 1-3-2022 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் வட்டித் தொழில், நகை அடகு,வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி, வெளிப்படையாக தெரியாத நோயை கண்டறியும் எண்டோஸ்கோபி மற்றும் ஸ்கேன் சென்டர்கள், மின்சாரம்,கண்ணாடி, பீங்கான சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு தொழில்கள், செயற்கை பொருட்கள், போதை பொருட்கள் விற்பனை,சட்ட விரோதமான பொருட்கள் விற்பனை நல்ல ஏற்றம் பெறும்.

    குருபகவான் ராகுவுடன் சம்மந்தம் பெறும் காலங்களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களால் கூட நிர்ணயிக்க முடியாத வகையில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி உலக வர்த்தகத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவார். குரு அதிசாரத்தில் கும்ப ராசியில் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்த காலத்தில் (2021 மே, ஜூன்) கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் முழு ஊரடங்கில் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.வரும் 2022-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குரு பகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் தங்கம் மற்றும் பங்குச் சந்தை முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    1-3-2022 முதல் 13-4-2022 வரை குரு தனது சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சரிக்கும் போது அரசின்நிர்வாகப் பணிகள் சிறப்படையும். அரசின் வருமானம் அதிகரிக்கும். அரசியல் தலைவர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும்.குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு உயர் கல்விக்கு தேவையான மானியம் வழங்கப்படும். புதிய பாடத்திட்டங்கள் அறிமுகமாகும். மக்களுக்கு வெளிநாட்டு மோகம் மிகுதியாகும். புதிய வெளிநாட்டு முதலீடுகள், கம்பெனிகள் அதிகரிக்கும். நகை விற்பனை அதிகரிக்கும்.

    கும்ப ராசியில் நிற்கும் குருவின் ஐந்தாம் பார்வை கால புரு‌ஷ மூன்றாமிடமான மிதுனத்தில் பதிகிறது. மிதுனம் உபய ராசி.ஆண் ராசி.காற்று ராசி. மூன்றாமிடம் என்பது மாற்றத்தைப் பற்றிக் கூறுமிடம். சென்ற ஆண்டு மிதுன ராசியில் நின்ற கோட்சார ராகுவால் இதுவரை தடைபட்ட அனைத்தும் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கும்.

    ஜோதிடர் ஐ. ஆனந்தி

     

    மிதுன ராசியின் அதிபதியான புதனின் காரகத் துவங்களும் குருவின் காரகத்துவங்களும் இணைகிறது. தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கல்விகள், நடனம், வாய்ப்பாட்டு, கணிதம், கணக்கியல், கணிப் பொறியியல், வணிகவியல் சம்பந்தமான கல்விகள் பயில மாணவர்கள் அதிகம் விரும்புவார்கள். புதன் சார்ந்த தொழில்களான, வங்கிகள்,கூட்டுறவு வங்கி, பத்திரிக்கை துறை,எழுத்து துறை, கல்வி நிறுவனங்கள்,ஜோதிடம் , பத்திரப் பதிவு துறை போன்றவைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சியை அளவிட முடியாது.

    கலைத்துறையின் அங்கமான நாடகம், ஆடியோ, வீடியோ வெளியீடு அதிகமாவதுடன் நவீன யுத்திகள் கையாளப்படும். புதிய நடிகர்கள், நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள், புத்தக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் உருவாகுவார்கள். மக்களிடையே படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

    செல்போன் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வணிக மார்க்கத்தில் ஈடுபட ஆர்வம் பிறக்கும். புதிய சில்லரை வணிகர்கள் உருவாகுவார்கள். சித்த வைத்தியத்தை நாடுவார்கள். ரியல் எஸ்டேட் குறிப்பாக காலி நில விற்பனையாளர்கள் அதிகம் பயன் பெறுவார்கள். ஆவணங்கள் தொடர்பான முறைகேடுகள் குறையும். பத்திரப் பதிவுத்துறை சீர்படுத்தப்படும். அரசிற்கு பத்திர பதிவுத்துறை மூலம் வருமானம் பெருகும். மகாவிஷ்ணு வழிபாடு அதிகமாகும். ஒப்பந்த வணிகம், ஆன்லைன் வணிகம் மிகுதியாகும். மிதுனம் காற்று ராசி என்பதால் தொற்று நோய் தாக்கம் இருந்தாலும் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.

    குருவின் ஏழாம் பார்வை கால புரு‌ஷ ஐந்தாமிடமான சிம்மத்தில் பதிகிறது. காலியாக கிடக்கும் அரசு கஜானாக்களை நிரப்பத் தேவையான நிதிகள் கிடைக்கும். அரச பதவியில் அமர்பவர்களுக்கு நாடாளும் சூட்சுமத்தை குருபகவான் கற்றுக் கொடுப்பார். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். மக்களிடையே பங்குச் சந்தை ஆர்வம் அதிகமாகும். அரசின் பங்குப் பத்திரங்களை மக்கள் அதிகம் வாங்குவார்கள். லஞ்ச வழக்கில் பலர் சிக்குவார்கள்.

    மக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க புதிய மருந்துகள் தயாரிக்கப்படும்.நாட்டின் சட்ட திட்டங்களால் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் சம்பவங்கள் குறையும்.வேதம் கற்று வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறும் வேத விற்பனர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீக தலங்களில் வேதம் கற்றுத் தரப்படும். புராண, நீதிக்கதைகள் போதிக்கப்படும். வேத பாடங்களை போதிக்கும் பாடசாலைகள் அதிகமாகும் .வேதம் கற்பவர்கள் அதிகரிப்பர். மக்களிடையே சாஸ்த்திர ஞானம் அதிகரிக்கும்.

    குருவின் ஒன்பதாம் பார்வை கால புரு‌ஷர் ஏழாமிடமான துலாத்தில் பதிகிறது. மகரத்தில் நிற்கும் கோட்சார சனி பகவானின் பத்தாம் பார்வையும் துலாத்தில் பதிகிறது. கூட்டுத் தொழில் செய்வதில் மக்களுக்கு ஆர்வம் மிகுதியாகும். பல புதிய பெண்கள் தொழில் முனைவோர்கள் கூட்டாக சேர்ந்து செயல்படுவார்கள். தடைபட்ட திருமணங்கள் குருவின் அருட்பார்வையால் இனிதே நடந்து முடியும்.

    காதல்,கலப்புத் திருமணம் மிகுதியாகும். அரசு நாட்டு மக்களின் நலனுக்காக புதிய வெளிநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும். சுற்றுலா துறைக்கு தனி கவனம் செலுத்தப்படும். போதிய வாழ்வாதாரம் இல்லாத மக்களுக்கு வியாபார நோக்கம் இல்லாத பொதுவுடமை நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். கலைத்துறையினரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். தொழில்நுட்ப கலை வளர்ச்சிக்கு போதிய நிதி உதவி அரசால் வழங்கப்படும்.

    எந்த கிரகப் பெயர்ச்சியாக இருந்தாலும் வருட கிரகங்களான குரு, சனி, ராகு கேது ஆகிய நான்கு கிர கங்களின் கூட்டு பலன்களே உலகை இயக்கும். கோட்சார சனி மகரத்தில் ஆட்சி பலம் பெற்று சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இரவு நேர உணவகம், இருட்டில் நடைபெறும் தொழில் சிறப்பாக இருக்கும். வயதான பெண்களுக்கு அரசின் உதவித் தொகை அதிகப்படுத்தப்படும்.

    வைரம் வைடூரியம் நவரத்தினம், தங்கம், வெள்ளி நகைகளின் பயன்பாடு, வியாபாரம், அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் பூ வியாபாரம், வாசனை திரவிய வியாபாரம், ஆடை ஆபரணங்கள், அலங்கார பொருட்கள், உயர்ரக உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், அரிசி, உப்பு, குளிர் பானங்கள் திரவப் பொருட்கள், பால், தயிர் உற்சாகமூட்டும் பானங்கள், மதுபானங்கள், பர்னிச்சர் வியாபாரம், வாகன தொழில், பேன்சி தொழில் அதிகரிக்கும்.

    பெண்கள் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்கப்படும். பழைய கடன், வட்டி தள்ளுபடியாகலாம். கோட்சார ராகு ரி‌ஷபத்தில் சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருப்பு, மின்சாரம், வாகனம், மலை, பாதுகாப்பு, இயந்திரம், கட்டுமானம், அரசு சார்ந்த விசயங்களில் நிறைய சீர்திருத்தம் நடைபெறும். இந்த துறை சார்ந்த ஊழியர்கள் நிறைய தவறு செய்ய நேரும். மலை, காடு போன்ற இடங்களில் தீ சார்ந்த பாதிப்பு உண்டு. அரசியல்வாதிகள் அரசு உயர் அதிகாரிகள் கவனமுடன் செயல்படவும். மத குருமார்கள், மத, அரசியல் தலைவர்களுக்கு கண்டமான காலம்.

    கோட்சார கேது விருச்சிகத்தில் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தொழிலாளர்கள் தொழில் சார்ந்த விசயங்களில் நிறைய நலிவு ஏற்படும். தொழிலாளிகளை ஏமாற்றி முதலாளிகள் சிறப்படையும் காலம். பேராசை அதிகமாகும். கோட்சார குரு ஓரளவு சாதகமாக இருந்தாலும் ராகு, கேதுக்களின் செயல்பாடுகள் அசுபத்தை மிகைப்படுத்துகிறது.ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி என்று ஒவ்வொரு பெயர்ச்சியும் மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடுகிறதே! அப்படியென்றால் கிரகங்கள் தான் நம்மை ஆள்கின்றன என்று நாம் எண்ணுகிறோம். உண்மையில் கிரகங்கள் நம்மை ஆளவில்லை.

    நமது செயல்பாடுகளின் எதிர் விளைவு தான் கிரகங்களின் பலன்கள். இயற்கைக்கு எதிரான சிந்தனையில் மனிதன் ஈடுபடும் போது ஏற்படும் இயற்கை சீற்றங்களே மனிதர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தும். இயற்கை வேறு நவகிரகங்கள் வேறு அல்ல. இயற்கையை போற்றினால் நவகிரகங்களின் நல்லாசிகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பரி பூரணமாக கிடைக்கும்.

    Next Story
    ×