search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காபி வந்த வரலாறு

    காபி பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காபியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.
    அன்றைக்கு வழக்கத்தைவிட ஆடுகள் உற்சாகமாக இருந்தன. வீட்டுக்குத் திரும்பும் வேளையிலும் துள்ளிக்குதித்தபடியே வந்தன.
    அந்தத் துள்ளல் ஆடுகளின் நடனம் போலவே இருந்தது. இரவில் பல ஆடுகள் தூங்கவே இல்லை. ‘ம்ம்ம்மே..!’ என்று உற்சாகமாகக் கத்தியபடியே இருந்தன.

    ஆடுகளின் சொந்தக்காரரான கல்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த நாள் ஆடுகளை மேய விடும்போது அவை குறிப்பிட்ட ஒரு தாவரத்தில் காணப்பட்ட சிவப்பு நிற பெர்ரி  பழங்களை விரும்பி உண்பதைக் கண்டார். அந்தப் பழங்களே ஆடுகளின் அதீத உற்சாகத்துக்குக் காரணம் என்று புரிந்துகொண்டார்.

    கல்டி, அந்த பெர்ரி பழங்களைத் தனக்குத் தெரிந்த துறவி ஒருவரிடம் கொடுத்தார். கல்டி கொடுத்த பெர்ரி பழங்களை உண்டு பார்த்த துறவி, அவற்றின் உற்சாகமூட்டும் தன்மை கண்டு பயந்தார். ‘சீச்சீ... இந்த பழங்களை உண்பது பாவம்’ என்று அவற்றை நெருப்பில் எறிந்தார்.

    சிறிது நேரத்தில் காபியின் நறுமணம் அந்தக் காற்றில் பரவியது. பழங்கள் நெருப்பின் சூட்டில் காபிக்கொட்டைகளாக மாறியிருந்தன. உலகின் முதல் காபிக்கொட்டை உருவான கதை இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு.

    காபிப் பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காபியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.

    காபியை ஒரு பயிராக இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் சூஃபி ஞானியான பாபா புடன். பதினாறாம் நூற்றாண்டில் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பாபா, அங்கே காபியின்  சுவையில் கிறங்கினார். திரும்பும் போது, காபிக்கொட்டைகளை அள்ளிக் கொண்டு வர ஆசை. ஆனால், அரேபியர்கள் தங்கள் வணிகத்தில் கறாரானவர்கள். வறுத்த காபி கொட்டைகளை மட்டுமே வணிகத்துக்காக வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வேறெங்கும் காபி விளைய ஆரம்பித்துவிட்டால் ஏமனின் வணிகம் படுத்துவிடுமல்லவா.

    பாபா, ஏழு காபி பழங்களை தனது நீண்ட, அடர்ந்த தாடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டார். பத்திரமாக இந்தியா வந்தடைந்தார். அதுவும் 6000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம். தன் சொந்தப் பிரதேசமான சிக்மகளூரின் சந்திரகிரி மலைப்பகுதியில் அந்த காபிப் பழங்களை விதைத்தார். அவை முளைத்தன, காய்த்தன. பரவின. இந்தியாவின் முதல்காபித் தோட்டம் கர்நாடகாவில் உருவானது. இன்றைக்கும் அந்த மலைப்பகுதி பாபா புடன்கிரி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்படியாக இந்தியாவுக்குள் காபி பயிர் வேரெடுத்து வைத்தது.

    முகில் எழுதிய உணவு சரித்திரம் என்ற நூலிலிருந்து... கோடி.
    Next Story
    ×