என் மலர்tooltip icon

    கதம்பம்

    கூடு கட்டும் தூக்கணாங்குருவி
    X
    கூடு கட்டும் தூக்கணாங்குருவி

    காதல் மாளிகை- கோவை சதாசிவம்

    நேர்த்தியாக பெண் குருவி விரும்பும் வகையில் கூடு கட்ட தெரியாத ஆண் குருவிகளுக்கு சம்சாரி வாழ்க்கை அமையாது. சன்னியாசியாக இருக்க வேண்டியதுதான்.
    உலகிலேயே ஒரு அற்புதமான கூட்டைக் கட்டுகிற பறவை தூக்கணாங்குருவி. அது கூடு கட்டுகிற அழகும் அது வாழுகிற அழகும் மெச்சத்தக்கவை.

    தூக்கணாங்குருவியை போல் நேர்த்தியாக கூடு கட்டுகிறப் பறவை வேற எதுவும் இல்லை. மனிதனால் கூட அப்படி கட்டி விட முடியாது.

    தூக்கணாங்குருவி முதலில் கூடு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்கிறது. அந்த இடம் எப்படி இருக்க வேண்டும் என்றால், நீர் நிலைகள் அருகாமையில் இருக்க வேண்டும். அதற்கு தண்ணீர் ரொம்ப முக்கியம்.

    இரண்டாவது உணவு கிடைக்கிற இடமாக இருக்கணும். தினையோ, கம்போ, சோளமோ ஏதாவது தானியம் விளைகிற இடமாக இருக்க வேண்டும்.

    மூன்றாவதாக தாம் கட்டுகிற கூடு எதிரிகளின் கைகளில் சிக்கிவிடாத வகையில் இருக்கவேண்டும். கூடு கட்டுவதற்கு இந்த மூன்றையும் யோசிக்கிறது தூக்கணாங்குருவி.

    இப்படிப்பட்ட இடத்தை தேர்வு செய்து ஆண் குருவி தான் கூடு கட்ட தொடங்குகிறது. பெண் குருவி கூடு கட்டாது.

    எந்தவித வாஸ்தும் பார்க்காமல் வாழ்வதற்கான சௌகரியங்களை மட்டுமே பார்த்து கூடு கட்டுகிறது தூக்கணாங்குருவி.

    தாம் குடும்பத்துடன் வசிக்கபோகும் அந்த கூட்டை தாங்கும் அளவு சக்தி கொண்ட தோகை நார்களை கிழித்து வந்து கூடு கட்டுவதற்கான முதல் முடிச்சைப் போடுகிறது.

    கூடு கட்டும் சமயத்தில் ஆண் குருவி எதை பற்றியும் யோசிக்காது. தொடர்ந்து 18 நாட்களில் கூட்டின் 90 சதவீத பணிகளை முடித்து விடும். இப்போது வாசல் மட்டும் வைக்கணும்.

    இந்நிலையில் ஆண் குருவி, பெண் குருவியை கூப்பிட்டு வந்து காட்டும். 2 மாடி கட்டியாச்சு, ரொம்ப நெருக்கமாக பிண்ணியாச்சு, உள்ளே காற்று புகுந்து வெளியே வருவதற்கான உள்கட்டமைப்பையும் கட்டியாச்சு. வாசல் வைத்தால் வேலை முடிந்து விடும். கூட்டுக்குள்ளே இன்னும் ஏதேனும் உள் அறைகளில் வேலை செய்ய வேண்டுமா என்பதை பெண் குருவி பார்வையிட்டு தீர்மானிக்கும். அது சொல்கிற படி கூட்டை கட்டி முடிக்க வேண்டும் ஆண் குருவி.

    கூடு கட்டி முடித்த பின் ஆண் குருவி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு சிறகடித்து மறுபடியும் பெண் குருவியை கூப்பிடும். வந்து பார்.. நான் கட்டி வைத்திக்கிற காதல் மாளிகையை பார் என்று அழைப்பு விடுக்கும்.

    பெண் குருவியும் ஓடி வந்து கூட்டுக்குள் நுழையும். பார்த்து விட்டு, நன்றாக இருக்கிறது.. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன. அதனையும் முடித்து வையுங்கள், அதன் பின் சேரலாம் என்று சொல்லி விட்டு காதலோடு பறந்து போய் விடும்.

    பெண் குருவியின் இசைவு கிடைத்து பிறகு ஆண் குருவி செய்யும் அடுத்த வேலை வாயில் அமைப்பது தான். கூட்டின் முதல் முடிச்சை வைக்கும் போது எவ்வளவு முக்கியத்தும் கொடுக்குமோ அது போல் வாசல் வைப்பதற்கும் மெனக்கெடும்.

    அந்த பருவத்தில் தென்மேற்கு பருவமழை எவ்வளவு பெய்யும் என்பதை கணித்து அதற்கேற்ப வாசல் அமைக்கும். தென்மேற்கு பருவமழை காற்றோடு அதிகமாக பெய்யும் என்று அறிந்தால் கூட்டின் வாசலை வடக்கு நோக்கி அமைக்கும்.

    வாசல் அமைத்து முடித்ததும் பெண் குருவி தான் சொல்லிய படி வந்து அந்த ஆண் குருவியுடன் இணைசேர்ந்து முட்டையிடும். அது காற்றில் அசைந்து ஒன்றோடு ஒன்று உரசி உடைந்து விடாமல் இருக்க ஆண்குருவி ஈர மண்ணை எடுத்து வந்து கூட்டில் ஆங்காங்கே பதித்து வைத்து சமநிலைப்படுத்தும். அடுத்து நிறைய பூச்சிகளை பிடித்து வரும். குஞ்சுகளுக்கு அதுவே தின்னும் வகையில் ஆண் குருவியும் பெண் குருவியும் தாம் பிடித்து வந்த பூச்சிகளை அந்த மண்ணில் பதித்து வைக்கும்.

    அப்படி பதிக்கப்பட்ட பூச்சிகளில் மின்மினி பூச்சிகளும் அகப்பட்டிருக்கும். அவை பறக்க முடியாமல் தப்பிப்பதற்காக தன்னை மினுக்கிகொள்கிறது. இந்த வெளிச்சம் பெட்ரூம்மில் விளக்கு போட்டது போல் இருக்கும்.

    அந்த வெளிச்சத்தை பார்த்து கிளைகளில் ஊர்ந்து வரும் பாம்பு, ஓணான் போன்றவை கூட்டுக்குள் ஏதோ இருக்கிறது என்ற அச்சத்தில் அவ்விடத்தை விட்டு அகன்று விடும். மின்மினி பூச்சியால் தூக்கணாங்குருவி கூட்டுக்கு எவ்வளவு பாதுகாப்பு பாருங்கள். அதே வேளையில் அதன் ஒளி விளக்காகவும் பயன்படுகிறது. இது குஞ்சுகளுக்கு இதமான தூக்கத்தை தரும். கீழே நீர் நிலைகள் இருப்பதால் ஏசி மாதிரி இருக்கும்.

    இப்போ ஆண் குருவி சும்மா இருக்காது. அது போல் இன்னொரு கூட்டைக்கட்டும். அங்கே மற்றொரு பெண் குருவி வந்து நான்கு, ஜந்து முட்டைகள் இட்டு குஞ்சிபொறிக்க வைக்கும். மறுபடியும் ஒரு அழகான கூட்டைகட்டும். இப்படி ஒரு பருவத்தில் ஆண் தூக்கணாங்குருவி நான்கு அல்லது ஜந்து கூடுகளை கட்டும். அதன் மூலம் அது ஐந்து பெண் குருவிகளை தாய்மை அடைய வைக்கிறது.

    நேர்த்தியாக பெண் குருவி விரும்பும் வகையில் கூடு கட்ட தெரியாத ஆண் குருவிகளுக்கு சம்சாரி வாழ்க்கை அமையாது. சன்னியாசியாக இருக்க வேண்டியதுதான்.

    சரியாக கூடு கட்ட தெரிந்த, உழைக்க தெரிந்த ஆண் தூக்கணாங்குருவியை தான் பெண் குருவி தேர்ந்தெடுத்து இணைசேர்ந்து சந்ததிகளை உருவாக்கும்.
    Next Story
    ×